சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்கள் பார்வையை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பதிக்குமாறு அந்நாட்டின் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட திரு சர்மா, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) நடைபெற்ற சாலைக் காட்சி நிகழ்வில் தொழில்துறைத் தலைவர்கள் மத்தியில் உரையாடினார்.
அப்போது திரு சர்மா “தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற நன்கு வளர்ச்சியடைந்த மாநிலங்களின்மீது வைத்துள்ள கவனத்தை, அசாம் மாநிலத்தை நோக்கித் திருப்புமாறு சிங்கப்பூர் வணிகங்களைக் கேட்டுக் கொண்டார்.
“நாங்களும் வளர்ச்சியடைய விரும்புகிறோம். எங்களால் உங்களுக்குப் பற்பல வாய்ப்புகளை வழங்க முடியும்,” என்று கூறிய திரு சர்மா, ஆண்டுக்கு 19 விழுக்காடு விகிதத்தில் அசாம் வளர்ந்து வருகிறது என்றும் அம்மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க தங்களிடம் ஏராளமான திட்டங்கள் உள்ளன என்றும் சொன்னார்.
ஹைட்ரோகார்பன், பாறைவேதித்துறை எனும் பெட்ரோகெமிக்கல், பசுமை எரிசக்தி, மின்னணுவியல், பகுதி மின்கடத்திகள் போன்ற துறைகளிலுள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பட்டியலிட்ட திரு சர்மா, சிங்கப்பூர் நிறுவனங்கள் அசாமிற்கு வரவும் அழைப்பு விடுத்தார்.
குறிப்பாக, அசாமின் ஜாகீரோட் பகுதியில் அமையவிருக்கும் மின்னணு நகரம் குறித்துப் பேசிய திரு சர்மா, அத்திட்டம் அம்மாநிலத்தை உயர்தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றும் பாதையில் இட்டுச்செல்லும் என்று தெரிவித்தார்.
திரு சர்மா தமது பயணத்தின் முக்கிய அங்கமாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.
இந்தச் சந்திப்பு குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு விவியன், விரைவாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளியல்களில் ஒன்றான அசாம், தென்கிழக்காசியாவின் நுழைவாயில்களில் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திரு சர்மாவுடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது என்று கூறியிருக்கும் திரு விவியன், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் சிங்கப்பூர் - அசாம் இடையேயான ஒத்துழைப்பை எவ்வாறு விரிவுபடுத்த முடியும் என்பது குறித்து ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் அசாமுடன் வலுவான பங்காளித்துவத்தை எதிர்நோக்குவதாகவும் திரு விவியன் கூறினார்.
அண்மைய மாதங்களாக, இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசாங்கப் பேராளர்கள் தங்கள் மாநிலங்களுக்கான முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூருக்கு வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.