அத்தியாவசியப் பொருள்கள் 5 விழுக்காடு அளவிழப்பால் பாதிப்பு

காபி, ஷாம்பு, பால் மாவு உள்ளிட்ட பொருள்கள் மறைமுக விலையேற்றம்

அத்தியாவசியப் பொருள்கள் 5 விழுக்காடு அளவிழப்பால் பாதிப்பு

2 mins read
915ac278-7535-42f2-b1dd-7c35b24808ce
2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வாங்கப்பட்ட பொருள்களில் ஏறக்குறைய ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான பொருள்களின் விலை பாதிக்கப்பட்டுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் காப்பி, தேநீர், பழச்சாறு போன்ற உடனடியாக உட்கொள்ளும் பொருள்களின் அளவு குறைந்தும், அவற்றின் விலை மாறாமலோ அல்லது அதிகரித்தோ காணப்படுவதாகப் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தப் போக்கு அளவிழப்பு (Shrinkflation) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, அதே விலையில் ஒரு பொருளின் அளவைக் குறைத்து விற்பது.

இந்த வகையில், 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வாங்கப்பட்ட பொருள்களில் ஏறக்குறைய ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான பொருள்களின் விலை பாதிக்கப்பட்டுள்ளது.

தானியங்கள், ஷாம்பூ, சவர்க்காரம், உடனடி காப்பி/தேநீர், பழம்/காய்கறிச் சாறு, ஐஸ்கிரீம், பால் மாவு, அணையாடை (டயப்பர்) போன்ற அதிகம் வாங்கப்படும் எட்டு வகையான பொருள்கள் இதில் அடங்கும் என்று புள்ளிவிவரத் துறை புதன்கிழமை (ஏப்ரல் 29) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இத்தகைய போக்கு அனைத்துலக அளவிலும் காணப்படுவதாக அது தெரிவித்தது.

மாதாந்தர விலைக் குறையீட்டைக் கணிப்பதற்காக புள்ளிவிவரத் துறை கிட்டத்தட்ட 3,000 பொருள்களின் விலைகளை தொடர்ந்து கவனித்து வரும்.

எடுத்துக்காட்டாக, 1 லிட்டர் ஷாம்பூ $8க்கு விற்கப்பட்ட நிலையில், அதன் அளவை 0.8 லிட்டராகக் குறைத்து அதே விலைக்கு விற்றால், அதன் விலை மறைமுகமாக 25 விழுக்காடு உயர்கிறது. மற்றது, அளவைக் குறைத்து, விலையை அதிகரிப்பது. முன்னர் $8க்கு விற்கப்பட்ட ஷாம்பூ போத்தலின் அளவை 0.8 லிட்டராகக் குறைத்து, விலையையும் $10ஆக உயர்த்துவது.

பொதுமக்கள் ஒரு பொருளின் அளவைவிட அதன் இறுதி விலையையே அதிகம் கவனிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மறைமுக விலையேற்றத்தைக் கண்டறிய, சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கமும் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையமும் இணைந்து பல்பொருள் அங்காடிகளில் ‘ஒரு யூனிட் விலை’ (Unit Price) முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதன்மூலம் 100 கிராம் அல்லது 100 மில்லி அளவுக்கான விலையை ஒப்பிட்டுப் பார்த்து பயனீட்டாளர்கள் பொருள்களைத் தேர்வு செய்யலாம்.

அரிசி, இறைச்சி, பால் மாவு, முட்டை, சவர்க்காரம், மெல்லிழைத்தாள் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களுக்கு இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

எனினும், அத்தியாவசியத் தேவைகளுக்காக இத்தகைய விலையேற்றங்களைத் தவிர்க்க முடியாமல் பயனீட்டாளர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்