காவல்துறை வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) சைக்கிளோட்டியை மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து ஓட்டிச்சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறை சனிக்கிழமை (ஜூன் 7) அறிக்கையில் தெரிவித்தது.
அச்சம்பவம் மரினா கோஸ்டல் விரைவுச்சாலையை நோக்கிய கெப்பல் ரோட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட 41 வயது ஆண் சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரி, காவல்துறை சிறப்பு நடவடிக்கை தளபத்தியத்தைச் (எஸ்ஓசி) சேர்ந்த 30 வயது முழுநேர தேசிய சேவையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சைக்கிளோட்டி மீது மோதியதை அறியாததால் அவர் சம்பவ இடத்தைவிட்டு ஓட்டிச்சென்றதாக நம்பப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் அத்தகவல் தெரியவந்தது.
தகவல் தெரியவந்த உடனேயே அவர் சம்பவ இடத்துக்குத் திரும்பிவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் பிறரின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமல் வாகனம் ஓட்டியது, பிறருக்குக் காயம் விளைவித்தது ஆகியவற்றின் தொடர்பில் அந்தக் காவல்துறை அதிகாரி மீது நடத்தப்படும் விசாரணையில் அவர் ஒத்துழைத்து வருகிறார்.
விசாரணை நடைபெறும் காலத்தில் வாகனம் ஓட்டும் பணிகளில் அவர் ஈடுபடமாட்டார்.