தாய்லாந்துக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜிராபோல் வோங்விட்டுக்குச் சிங்கப்பூரின் மெச்சத்தகு சேவை விருதை (ராணுவம்) அதிபர் தர்மன் சண்முகரத்னம் வழங்கியுள்ளார்.
தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) காலை தற்காப்பு அமைச்சுக் கட்டடத்தில் அட்மிரல் ஜிராபோலுக்கு விருதை அணிவித்தார்.
இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான தற்காப்பு உறவை வலுப்படுத்துவதில் அட்மிரல் ஜிராபோல் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டது. அவருடைய தலைமைத்துவத்தின்கீழ் இரு நாடுகளின் கடற்படைகளும் புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்திக்கொண்டன.
கடற்படைகளுக்கு இடையில் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதில் அட்மிரல் ஜிராபோல் உறுதியாக இருந்தார். இரு தரப்பின் கடற்படை அதிகாரிகளும் அவ்வப்போது பேச்சு நடத்துவதற்கும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கும் அவர் உறுதுணையாக இருந்தார்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி சிங்கப்பூருக்கு வருகை புரிந்த அட்மிரல் ஜிராபோல் 8ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பார். அட்மிரல் ஜிராபோல், திரு சானுடன் பேச்சு நடத்தினார். சிங்கப்பூரின் தற்காப்புப் படை, கடற்படைத் தளபதிகளையும் அவர் சந்தித்தார்.