தமிழ் வாசகர் மனங்களைத் தங்கள் எழுத்துகளால் கொள்ளைகொண்டு, மறைந்தும் இறவாப் புகழ் எய்தியுள்ள தமிழ் எழுத்தாளர்கள் ஐவரை தேசிய நூலக வாரியம் சிறப்பிக்கவுள்ளது.
எட்டாவது முறையாக இடம்பெறும் ‘நினைவின் தடங்கள்’ நிகழ்ச்சி, வரும் டிசம்பர் 1ஆம் தேதி காணொளி வடிவில் வெளியிடப்படும்.
தேசிய நூலக வாரியம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நினைவஞ்சலி, இவ்வாண்டு ஜோதிர்லதா கிரிஜா, இந்திரா சௌந்தர்ராஜன், இராசேந்திர சோழன், ராஜ் கௌதமன், முத்தம்மாள் பழனிச்சாமி உள்ளிட்டோர் நினைவாக நடைபெறும்.
நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் ‘தமிழ் நூலகச் சேவைகள்’ ஃபேஸ்புக் பக்கத்தில் 45 நிமிடக் காணொளியாக வெளியிடப்படும்.
ஒவ்வோர் எழுத்தாளர் குறித்தும் சிறு அறிமுகத்துடன் அவருடன் பழகியோர், ரசிகர்களின் 7 நிமிட உரையும் இடம்பெறும்.
இராசேந்திர சோழன் குறித்து உமா கதிர், ஜோதிர்லதா கிரிஜா குறித்து ரமா சுரேஷ், இந்திரா சௌந்தர்ராஜன் குறித்து இளவழகன், ராஜ் கௌதமன் குறித்து இந்தியாவிலிருந்து பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், முத்தம்மாள் பழனிச்சாமி குறித்து அழகுநிலா ஆகியோர் உரையாற்றுவர்.
இந்நிகழ்ச்சியை தேசிய நூலக வாரியத்தின் நூலகர் ஜமுனா தொகுத்து வழங்குவார்.
“நம்மைவிட்டுப் பிரிந்தாலும், தங்கள் படைப்புகள் வாயிலாக நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் எழுத்தாளர்களைக் கௌரவிப்பதுடன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இது. ஃபேஸ்புக் குழுவில் இணைந்து இந்தக் காணொளியைக் கண்டு ரசிக்கலாம்,” என்றார் ஜமுனா.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின் இறுதியில் ஒவ்வோர் எழுத்தாளரின் சிறந்த படைப்புகளும் நூல்களும் வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படும்.