சிங்கப்பூரில் புதிய தரவு மையங்களை அமைப்பதற்காக பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் தரவு மையமான ஏர்டிரங்க் (AirTrunk) பசுமைக் கடனாக $2.2 பில்லியன் கோரியுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, இவ்வட்டாரத்தில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட ஏர்டிரங்க் நிறுவனம், சிங்கப்பூரில் 2050 டிசம்பர் 31க்குள் 80.2 மெகாவாட் பசுமைத்தளத் தரவு மைய வளாகத்தைக் கட்டுவதற்கான நிதியாதரவை அக்கடன் வழங்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.
தனது முக்கியமான அமெரிக்க வாடிக்கையாளரின் சார்பாக அம்மையம் இங்குக் கட்டப்படும் எனச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்துக் கருத்துரைக்க பிளாக்ஸ்டோன் நிறுவனப் பேச்சாளர் மறுத்துவிட்டதாக புளூம்பெர்க் செய்தி தெரிவித்தது.
விரைவாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், ஆசியாவில் தரவு மையங்களுக்கான நிதி திரட்டுத் தேவையை முடுக்கிவிட்டுள்ளது.
தரவு மையங்களுக்கான ஈர்ப்பிடமாக ஆசியா உருவெடுத்து வருகிறது. வரும் 2028ஆம் ஆண்டுவரையிலும், ஆண்டுக்கு 32 விழுக்காடு என்ற விகிதத்தில் அதற்கான தேவை விரிவடையும் எனச் சொல்லப்படுகிறது என்று சொத்துச் சந்தைச் சேவைகள் நிறுவனமான ‘குஷ்மன் அண்ட் வேக்ஃபீல்டு’ தரவுகள் தெரிவிக்கின்றன. மாறாக, அமெரிக்காவில் அந்த வளர்ச்சி 18 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்கில் உள்ள தனது தரவு மையங்களின் முதலீட்டுச் செலவினத் தேவைகளுக்கு நிதியாதரவு வழங்க, ஏர்டிரங்க் நிறுவனம் தனியாக 2.8 பில்லியன் அமெரிக்க டாலரைப் (S$3.75 பில்லியன்) பெற முயல்வதாகவும் சொல்லப்படுகிறது.