தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சையது ஆல்வி வெள்ளநீர்த் தடுப்பு நிலையப் பணிகள் நிறைவு

2 mins read
2e262337-f6c9-41ad-a63b-521e662dd882
தடுப்பு நிலைய மேற்பரப்பு. - படம்: தேசிய தண்ணீர் முகவை (பியுபி)

தாழ்வான நிலப்பகுதியான ஜாலான் புசார் வட்­டா­ரத்­தில் வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டு­வ­தைத் தடுப்பதற்காகத் திட்டமிடப்பட்ட ‘சையது ஆல்வி வெள்ளநீர்த் தடுப்பு நிலைய’ (Syed Alwi Pumping Station) பணிகள் நிறைவடைந்துள்ளன.

வடிநீர் மேலாண்மை, வெள்ளத் தடுப்பு மீள்தன்மைத் திட்டங்களின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டுள்ள இந்நிலையம் தானியங்கி முறையில் அப்பகுதியில் விழும் வடிநீரைத் தொட்டியில் நிரப்பி, பின்னர் ரோச்சோர் கால்வாயில் கொண்டுசேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது நிலத்துக்கு அடியில் 1,190 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. உட்புறமுள்ள தொட்டியில் 4.5 மீட்டர் உயரத்துக்கு நீர் நிரம்பியவுடன், அங்குள்ள நீரேற்று இயந்திரங்கள் (pumps) உடனடியாக நீரைக் கால்வாயில் வெளியேற்றும். இது கால்வாயின் கொள்ளளவு எட்டப்பட்டதும் ஏற்படும் நீர் எதிரோட்டத்தைத் தடுக்கும் என்றும் தேசிய தண்ணீர் முகவை (பியுபி) தெரிவித்துள்ளது.

நிலத்துக்கு அடியில் நீர்த்தடுப்பு நிலையமாக உள்ள இக்கட்டடத்தின் மேற்புறம், அருகேயுள்ள வீவக குடியிருப்பாளர்களின் பயன்பாட்டுக்கும் சமூகப் பயன்பாட்டுக்கும் ஏற்ற பொழுதுபோக்கு இடமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செடிகள், இருக்கை வசதிகளுடன் உடற்பயிற்சி, ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் முழுத்தோற்றம்.
கட்டடத்தின் முழுத்தோற்றம். - படம்: தேசிய தண்ணீர் முகவை (பியுபி)

நீர் புகும் மூன்று வசதிகள் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. பின்னர் ‘ரேக்கர் ஸ்கிரீன்’ (Racker Screens) எனுமிடத்தில் உள்ளே வரும் மழைநீரிலுள்ள குப்பைகள் அகற்றப்பட்டு நீர்த்தொட்டியை வந்தடையும்.

நிலத்துக்கு அடியில் 1,190 சதுர மீட்டர் பரப்பளவையும் 9300 கன மீட்டர் கொள்ளளவு உடைய நீர்த்தொட்டி.
நிலத்துக்கு அடியில் 1,190 சதுர மீட்டர் பரப்பளவையும் 9300 கன மீட்டர் கொள்ளளவு உடைய நீர்த்தொட்டி. - படம்: தேசிய தண்ணீர் முகவை (பியுபி)

இத்தொட்டி 9,300 கன மீட்டர் கொள்ளளவுடையது. பின்னர் அங்குள்ள நீர் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கால்வாயில் வெளியேற்றப்படும். இங்கு ஆறு நீரேற்று இயந்திரங்கள் அமைந்துள்ளதாகவும் அவற்றில் நான்கு எப்போதும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது கால்வாயின் குறுக்கேயுள்ள கம்பிவடங்களைப் பாதிக்காமல் நீரை வெளியிட ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரோச்சோர் கால்வாயிலிருந்து எதிர்நீரோட்டத்தைத் தடுக்க வெள்ளத் தடுப்புக் கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

நீர்த் தடுப்­புத் தொட்­டியிலிருந்து இந்த நிலையம் சற்றே மாறுபட்டது. தொட்டியில் வடிநீர் சேமிக்கப்படும் என்றும் இந்நிலையம் வரும் நீரைப் பிரித்து ஒழுங்குபடுத்தி வெளியேற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2000 - 2010ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் ஜாலான் புசாரில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சையது ஆல்வி சாலை வடிகாலை மேம்படுத்துதல், தளமட்டத்தை உயர்த்துதல், ரோச்சோர் கால்வாயின் ஆழத்தையும் அகலத்தையும் அதிகரித்தல் ஆகிய பணிகளைத் தேசிய தண்ணீர் முகவை (பியுபி) மேற்கொண்டது.

“இப்பணிகள் அவ்வட்டாரத்தில் வெள்ள பாதிப்பைத் தடுக்க உதவினாலும் மேம்பட்ட வெள்ளத் தடுப்பு மீள்தன்மைத் திட்டங்களுக்கு மாற்றுத் தீர்வு தேவைப்பட்டது,” என்றார் நீர்ப்பிடிப்பு, நீர்வழிகள் துறையின் மூத்த முதன்மைப் பொறியாளர் காயத்ரி கல்யாணராமன், 39.

“குறிப்பாக, இந்தப் பகுதியில் உள்ள பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை மனத்திற்கொண்டும், மறுமேம்பாட்டின்போது தளமட்டத்தை உயர்த்துவது சாத்தியமானதன்று என்பதாலும் இந்த நிலையம் திட்டமிடப்பட்டது,” என்றார் காயத்ரி.

இதே போன்ற தாழ்வான பகுதிகளான தஞ்சோங் காத்தோங், பூல் (Poole) சாலை, விம்பார்ன் (Wimborne) சாலை ஆகிய வட்டாரங்களிலும் இதே அணுகுமுறை கையாளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்