மோசடிக்கு உடந்தை; சிங்கப்பூருக்கு வந்தவுடன் மலேசிய ஆடவர் கைது

மோசடிக்கு உடந்தை; சிங்கப்பூருக்கு வந்தவுடன் மலேசிய ஆடவர் கைது

2 mins read
57977b2d-69ee-4b68-b9c0-46f628eeb6f6
சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் 28 ‘ஏடிஎம்’ அட்டைகளையும் இரண்டு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனர். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் நோக்கில், சிங்கப்பூரில் உள்ள தானியக்க வங்கி இயந்திரங்களில் ‘ஏடிஎம்’ அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுக்க வந்த 24 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதித் திட்டத்தில் உடந்தையாய் இருப்போரின் வங்கிக்கணக்குகளிலிருந்து பணத்தை எடுப்பதற்காக அந்த ஆடவர் சிங்கப்பூருக்கு வந்தது குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து, மோசடிகளுக்கு எதிரான தளபத்தியம், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், மோசடியில் தொடர்புடைய 28 ‘ஏடிஎம்’ அட்டைகளையும் இரண்டு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனர். அந்த ‘ஏடிஎம்’ அட்டைகளைச் சோதித்தபோது $71,000 இழப்பு ஏற்படுத்திய எட்டு மோசடிச் சம்பவங்களில் தொடர்புடைய அட்டைகள் குறித்துத் தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில், ‘ஏடிஎம்’ அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துத் தங்களிடம் தரும்படி அறிமுகமற்ற சிலர் கேட்டுக்கொண்டதாக ஆடவர் கூறினார். அவர்கள் பன்னாட்டு மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

முறைகேடான கணினிப் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ், கணினித் தகவல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக ஆடவர்மீது வியாழக்கிழமை (ஜூன் 25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று கூறப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $5,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மோசடிக் கும்பல்களுக்கு உதவும் நோக்கில் மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வரும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டோரிடமிருந்து ரொக்கம் அல்லது விலையுயர்ந்த பொருள்களைப் பெற்றுச்செல்லவோ ‘ஏடிஎம்’ இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்துச்செல்லவோ அவர்கள் உதவுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியர்ஆடவர்கைதுபண மோசடி