அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் லாரியிலிருந்து கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகக் காவல்துறை கூறியுள்ளது.
அந்த லாரியை ஓட்டிய 54 வயது ஆடவர் விசாரணையில் உதவுவதாக அது தெரிவித்தது.
புதன்கிழமை (ஏப்ரல் 9) மாலை, அப்பர் புக்கிட் தீமா ரோடு - கோம்பாக் அவென்யூ சாலைச் சந்திப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பான காணொளி ‘எஸ்ஜிசீக்ரெட்’ எனும் டெலிகிராம் குழுவில் பகிரப்பட்டது.
அதில், லாரியிலிருந்த சில கான்கிரீட் பலகைகள் சாலையில் விழுந்து கிடப்பதைக் காணமுடிகிறது.
மூன்று தடங்களைக் கொண்ட அந்தச் சாலை முழுவதும் தடுப்புகள் வைக்கப்பட்டதால் போக்குவரத்து நிலைகுத்திப் போனதையும் அக்காணொளி காட்டுகிறது.
எஸ்ஜி ரோடு விஜிலான்டெ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட மற்றொரு காணொளி, சேதத்தின் அளவையும் விபத்துக்குப் பிறகு சாலையில் இடத்தடம் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டதையும் காட்டுகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், சம்பவம் குறித்து புதன்கிழமை மாலை 6.50 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
தொடர்புடைய செய்திகள்
சம்பவ இடத்தில் தனது உதவி தேவைப்படவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது. விசாரணை தொடர்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது.