சிங்கப்பூர் 2035ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து 1.75 கிகாவாட் சூரிய மின்சக்தியை இறக்குமதி செய்வதற்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கியுள்ளது.
வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் அக்டோபர் 22ஆம் தேதி இதைத் தெரிவித்தார்.
‘சன் கேபிள்’ எனும் 31.5 பில்லியன் வெள்ளி மதிப்பிலான இந்தத் திட்டத்தின்கீழ் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் மிகப் பெரிய சூரிய மின்சக்தி ஆலை அமைக்கப்படும்.
பின்னர் டார்வினிலிருந்து கடலடிக் கம்பிவடம் மூலமாக 4,200 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து மின்சாரம் சிங்கப்பூரை வந்தடையும்.
சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் இரண்டாம் நாளில், காற்றை மாசுபடுத்தும் பொருள்களை வெளியேற்றாத எரிசக்தி தொடர்பான ஆசியா உச்சநிலை மாநாட்டில் டாக்டர் டான் உரையாற்றினார்.
இத்தகைய எரிசக்தியை இறக்குமதி செய்யும் நம்பகமான திட்டங்கள் 2035ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் பலனளிக்கும் என்றாலும் அவற்றுக்கும் அரசாங்கம் தொடர்ந்து ஒப்புதல் வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் சென்ற மாதம் (செப்டம்பர்), சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிக்காத மின்சக்தி இறக்குமதி இலக்கை ஆறு கிகாவாட்டிற்கு உயர்த்தியதை அடுத்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு கிகாவாட் மின்சாரம் என்பது 2035ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் மின்சாரத் தேவையில் கிட்டத்தட்ட 30 விழுக்காடாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இது தவிர, இந்தோனீசியா, கம்போடியா, வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து 5.6 கிகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்வது தொடர்பான உடன்படிக்கைகளிலும் சிங்கப்பூர் கையொப்பமிட்டுள்ளது.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள், தகவல்களின் அடிப்படையில், ‘சன் கேபிள்’ திட்டம் தொழில்நுட்ப ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் வெற்றிகரமாகச் செயல்படும் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் கருதுவதாக டாக்டர் டான் தமது உரையில் கூறினார்.
இத்திட்டம் அடுத்த கட்டங்களை எட்டுவதற்கு, வர்த்தக ரீதியில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்புடைய விலையை ‘சன் கேபிள்’ நிறுவனம் பரிந்துரைக்க வேண்டும் என்று ஆணையம் கூறுகிறது.
மேலும், கடலடிக் கம்பிவடம் எந்தெந்த நாடுகளின் வழியாக அமைக்கப்பட்டுள்ளதோ அவற்றின் ஒப்புதலையும் ‘சன் கேபிள்’ நிறுவனம் பெறவேண்டும் என்பதை டாக்டர் டான் சுட்டினார்.

