இன நல்லிணக்கச் சட்டங்களுக்கு எதிராகக் கடிதம் அனுப்பியோருக்கு நிபந்தனையுடன் எச்சரிக்கை

இன நல்லிணக்கச் சட்டங்களுக்கு எதிராகக் கடிதம் அனுப்பியோருக்கு நிபந்தனையுடன் எச்சரிக்கை

2 mins read
b4d59235-7a3f-4e35-ac16-175b5aa5d1f4
இராவாடி ரோட்டில் உள்ள உள்துறை அமைச்சு, காவல்துறை தலைமையகங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் இன நல்லிணக்கச் சட்டங்களுக்கு எதிராகப் பேரணி நடத்தி உள்துறை அமைச்சுக்குக் கடிதங்களை அனுப்பிய 11 பேருக்குக் காவல்துறை நிபந்தனையுடன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்கள், 30 பேர் ஈடுபட்ட பேரணியில் பங்கேற்றவர்கள். அவர்கள் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி நொவீனா பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) நிலையத்திலிருந்து இராவாடி ரோட்டில் இருக்கும் உள்துறை அமைச்சின் தலைமையக நுழைவாயில் வரை பேரணி நடத்தினர்.

அந்தக் குழுவில் இடம்பெற்றவர்களில் எழுவர் மீது விசாரணை தொடர்கிறது. அவர்கள் மற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களின் முன்னாள் மாணவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர். 2024ல் அறிமுகமான இன நல்லிணக்கப் பாதுகாப்பு மசோதாவை (Maintenance of Racial Harmony Bill) எதிர்க்கும் கருத்துகளைக் கொண்ட கடிதங்களுடன் அக்குழு பேரணியில் ஈடுபட்டது.

அந்த மசோதாவுக்கு 2025ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அச்சட்டம், சமூக நல்லிணக்கம் மற்றும் சமய அமைப்புகளின்வழி காணப்படும் வெளிநாட்டுத் தலையீடு போன்ற அம்சங்களின் தொடர்பிலான பதிவுகள் சம்பந்தப்பட்டதாகும்.

பேரணி தொடங்குவதற்கு முன்பு அன்று பிற்பகலில் இளம் பெண் ஒருவர், நொவீனா எம்ஆர்டி நிலையத்தில் ‘காஸாவில் பல்கலைக்கழகங்கள் எஞ்சியில்லை’ என்ற பொருளைக் கொண்ட ஆங்கில வார்த்தைகளை வெள்ளை டி-சட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தனர். பேரணி நடத்தியோரில் பலர் அந்த டி-சட்டைகளை அணிந்திருந்தனர்.

கடிதங்களை அனுப்ப அக்குழுவில் இருவருக்கு மட்டும் உள்துறை அமைச்சு வளாகத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. பிறகு அங்கிருந்து புறப்படுமாறு குழுவினர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக இஸ்ரேல்-ஹமாஸ் தொடர்பான பொதுக் கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்த சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தொடர்ந்து நினைவூட்டிவந்த காலகட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்கு புதன்கிழமை (மார்ச் 25) பதிலளித்த காவல்துறை, விசாரணை நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்தது. 20லிருந்து 27 வயதுக்கு உட்பட்ட 11 பேருக்கு 12 மாதத்துக்கு நிபந்தனையுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டம் அல்லது பேரணியில் கலந்துகொண்டது, நீதிக்கு இடையூறு விளவித்தது போன்ற காரணங்களுக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்