தீபாவளியை முன்னிட்டு இவ்வார இறுதியில் ஜோகூருடனான சிங்கப்பூரின் இரு நிலவழி சோதனைச்சாவடிகளிலும் கடுமையான நெரிசல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளித் திருநாள் இம்முறை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) கொண்டாடப்படுவதால் அதற்கு மறுநாளான திங்கட்கிழமையும் (நவம்பர் 9) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) முதல் திங்கட்கிழமை (நவம்பர் 9) வரை முன்கூட்டியே திட்டமிட்டு நெரிசல் இல்லாத நேரங்களில் ஜோகூரை நோக்கி பயணம் செய்யும்படி சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
MyICA mobile app என்ற கைப்பேசிச் செயலிவழி கியூஆர் குறியீட்டை உருவாக்கிப் பயன்படுத்துவதன்மூலம் விரைவாகவும் தடையின்றியும் குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்ற முடியும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு உட்பட உலக அளவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறித்த சூழல்களால் சிங்கப்பூரின் அனைத்து எல்லைகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை ஆணையம் நினைவூட்டியது. அதனால், சோதனைகள் முடியும்வரை பயணிகள் காத்திருக்கும் நேரம் அதிகரிக்கும் எனவும் அது கூறியது.
செப்டம்பர் மாதம் 4 முதல் 14ஆம் தேதி வரையிலான பள்ளி விடுமுறைக் காலத்தில் 6.1 மில்லியன் பயணிகள் இரு நிலவழி சோதனைச்சாவடிகளைக் கடந்தனர் என்றும் செப்டம்பர் 4ஆம் தேதி மட்டும் 599,000 என அது உச்சத்தைத் தொட்டது என்றும் ஆணையம் தெரிவித்தது. அதற்கு முன்பாக ஜூன் 19ஆம் தேதி ஆக அதிகமாக 598,000 பயணிகள் ஒரே நாளில் இரு நிலவழி எல்லைகளைக் கடந்திருந்தனர்.
காலை, மாலை வேளைகளில் நெரிசல் உச்சத்தில் இருந்தபோது காரில் செல்ல முடிவெடுத்தோர் அப்போது மூன்று மணி நேரம்வரை வரிசையில் காத்திருக்க நேர்ந்ததையும் ஆணையம் சுட்டியது.
சோதனைச்சாவடிகளில் அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி, போக்குவரத்துக் குற்றங்கள் புரிவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் எச்சரித்துள்ளது.
