ஏஷியா டைம்ஸ் ஊடகத்தில் தைவான் விவகாரம் குறித்து வெளியான கட்டுரை பற்றித் தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை (ஜனவரி 24) கருத்துத் தெரிவித்திருக்கிறது. தைவானில் சிங்கப்பூர் ஆயுதப் படை எத்தகைய பங்கு வகிக்கலாம் என்பது குறித்து அந்தக் கட்டுரையில் ஆலோசனை கூறப்பட்டிருந்தது.
கட்டுரையைத் திரு சித்தார்த் போவ்மிக் என்பவர், தேசியச் சேவையில் சேரும் முன்னர் எழுதியதாக அமைச்சு குறிப்பிட்டது.
அது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அது தற்காப்பு அமைச்சையோ ஆயுதப்படையையோ பிரதிநிதிக்கவில்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.
சர்ச்சைக்குரிய கட்டுரை, இம்மாதம் (ஜனவரி) 19ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. கட்டுரையை எழுதியபோது திரு போவ்மிக் ஆயுதப் படையில் சேவையாற்றுவதைப் போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தியது. ஆயுதப்படையின் கருத்தையே அவர் வெளியிட்டிருப்பதைப் போன்ற பிம்பத்தை அது கொடுத்ததாக இணையவாசிகள் சிலர் குறிப்பிட்டிருந்தனர்.
“திரு போவ்மிக், 2025ஆம் ஆண்டு டிசம்பரில் கட்டுரையை எழுதிச் சமர்ப்பித்திருந்தார். அது 2026 ஜனவரியில் சிங்கப்பூர் ஆயுதப் படையில் அவர் தேசியச் சேவையாளராகச் சேருவதற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்டது,” என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
கட்டுரையில் இம்மாதம் 24ஆம் தேதி திருத்தங்கள் செய்யப்பட்டன. திரு போவ்மிக் தற்போது முழு நேர தேசியச் சேவையாளர் என்பதையும் கட்டுரை அவர் சேருவதற்கு முன்பு எழுதப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்துவது நோக்கம்.
கட்டுரையில், “சிங்கப்பூர், தைவானுடனான ராணுவ உறவைப் பயன்படுத்தி, சீனா-தைவான் உறவுகளில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க உதவ வேண்டும்,” என்று எழுத்தாளர் கூறியிருந்தார்.
சிங்கப்பூருக்கும் தைவானுக்கும் இடையில் ஸ்டார்லைட் எனும் தற்காப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு வேளை சீனப் பெருநிலம் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கினால், அதை வலுவாகத் தடுக்க அத்தகைய திட்டம் உதவும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தைவானுடனான பயிற்சி ஏற்பாடுகள் 1975ஆம் ஆண்டுமுதல் நடப்பில் இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டுள்ளது.
இது முன்னாள் பிரதமர் அமரர் லீ குவான் யூ மற்றும் அப்போதைய தைவான் பிரதமர் சியாங் சிங்-குவோ இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் வரையறுக்கப்பட்ட நிலம் மற்றும் வான்வெளியைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூர் ஆயுதப்படைப் பிரிவுகள் தைவானில் பயிற்சி பெற அனுமதிக்கும் உடன்பாட்டை இரு தரப்பினரும் எட்டினர்.

