புகைமூட்டம் தொடர்பான குற்றங்களைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்ய ஏதுவாகப் புகைமூட்டச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான திருத்தங்களைச் சிங்கப்பூர் விரைவில் கொண்டுவரக்கூடும்.
அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனங்கள் இல்லாத நிலையில் அவர்களிடம் விசாரணைகளை நடத்தவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் வழிவிடும்.
நிறுவனங்கள் சிங்கப்பூருக்கு வெளியே தங்கியிருந்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்க்க முனைவதைத் தடுப்பதே இந்த மாற்றங்களின் நோக்கம் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு புதன்கிழமை (நவம்பர் 4) தெரிவித்தது.
எல்லை தாண்டிய புகைமூட்டத் தூய்மைக்கேட்டுக் கட்டுப்பாடு (திருத்த) மசோதா புதன்கிழமை (நவம்பர் 4) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரண்டாம் வாசிப்பிற்கு வந்தது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிங்கப்பூர் சந்தித்திராத மிக மோசமான புகைமூட்டச் சூழலைத் தொடர்ந்து, அதிபரால் கையொப்பமிடப்பட்ட அவசரச் சான்றிதழின்கீழ் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அவசரச் சான்றிதழ், உத்தேச மசோதா ஒன்றை, ஒரே நாடாளுமன்ற அமர்விலேயே தாக்கல் செய்யவும் விவாதிக்கவும் மூன்று வாசிப்புகளைக் கடந்து நிறைவேற்றவும் அனுமதிக்கிறது. புதன்கிழமை விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இதன் தொடர்பில் விவாதித்தனர்.
பொறுப்பற்ற முறையில் தீ மூட்டுவது குறித்து விசாரிப்பதற்கும் பொறுப்புடைமையை நிலைநாட்டுவதற்கும் தவறிழைக்கும் நிறுவனங்கள்மீதான அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கும் எல்லை தாண்டிய புகைமூட்டத் தூய்மைக்கேட்டுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தங்கள் சிங்கப்பூரின் திறனை மேம்படுத்தும் என்று சுற்றுப்புற அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 25 வரை புகைமூட்டம் நிலவியது; இதில் 33 நாள்கள் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதுடன், ஐந்து நாள்கள் மிகவும் மோசமான நிலையை எட்டியது.
அண்மை வாரங்களில், இந்தோனேசியாவின் காடுகளிலும் சதுப்பு நிலங்களிலும் ஏற்பட்ட தீயினால் உருவான புகைமூட்டம் இவ்வட்டாரத்தின் சில பகுதிகளைப் பாதித்தது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, மற்றொரு நாட்டின் அதிகார வரம்பிற்குள் சிங்கப்பூர் தனது அமலாக்க அதிகாரங்களை நேரடியாகப் பயன்படுத்த முடியாது என்று அக்டோபர் 25ஆம் தேதி கூறியிருந்தார்.
உத்தரவுக் கடிதம் அனுப்பப்பட்ட பிறகும்கூட, அந்த வெளிநாட்டு நிறுவனம் அதற்கு இணங்க மறுத்து, அதன் அதிகாரிகள் எவரும் சிங்கப்பூருக்குள் நுழையவில்லை என்றால், சட்ட அமலாக்கம் தொடர்ந்து கடினமாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
