வாழ்க்கைச் செலவினம், வேலை உத்தரவாதம் சிங்கப்பூரர்களின் அக்கறைக்குரிய விவகாரங்களாகத் திகழ்கின்றன என்றும் அவற்றைச் சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
உள்ளூர் செய்தியாளர்களுடன் நவம்பர் 8ம் தேதி நடந்த சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வரவுசெலவுத் திட்டம் 2025க்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறிய அவர், பொதுமக்களுடனான கலந்தாலோசனைகள் டிசம்பரில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
‘எஸ்ஜி60’ஐ முன்னிட்டு, பொருளியல் உத்திகள், ஊழியர்களுக்கு வேலைகள், திறன்மேம்பாட்டுக்கான வாய்ப்புகள், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு, சிங்கப்பூர்களின் ஒருமைப்பாட்டு, ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துதல் ஆகிய நான்கு விரிவான கருப்பொருள்கள் உள்ளதாகத் திரு வோங் கூறினார்.
“இந்தக் கருப்பொருள்கள் அனைத்தும் சிங்கப்பூரர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வரையப்பட்டுள்ளன,” என்றார் திரு வோங்.
வேலைகள் குறித்து உரையாற்றிய திரு வோங், வேலையின்மை விகிதம் குறைவாக உள்ளதால், கவலை ஒட்டுமொத்த வேலையின்மையைப் பற்றியது அல்ல; கொந்தளிப்பான சுற்றுச்சூழலுக்கு மத்தியில், வேலை உத்தரவாதத்தை உறுதிசெய்வதைப் பற்றியது என்று கூறினார்.
“உலகில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் உணரமுடிகிறது. இவற்றுக்கு மத்தியில் இன்றைய வேலையைப் பற்றி மட்டும் மக்கள் கவலைப்படுவதில்லை; எதிர்காலத்தில் அவர்களின் வேலை என்னவாக இருக்கும், நிலையான வருமானத்துடன் நல்ல வேலை நிலைக்குமா என்பது குறித்தும் அவர்கள் கவலைப்படுகின்றனர்,” என்று தெரிவித்தார் பிரதமர் வோங்.
சிங்கப்பூரர்களின் நல்வாழ்வைச் சீர்ப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், எந்த வகையான புதிய கொள்கைகள், திட்டங்கள் நடப்புக்கு வரவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி இவற்றின்மூலம் பிரகாசமான அனைவரையும் உள்ளடக்கும் எதிர்காலத்தை அமைத்திட அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் திரு வோங் சொன்னார்.