கொவிட்-19 தொடர்பாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஏறத்தாழ 280க்கு அதிகரித்ததாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு எளிதில் உடல்நிலை பாதிப்புறுவோருக்கு அமைச்சர் ஓங் வலியுறுத்தியுள்ளார்.
எளிதில் பாதிப்படையக்கூடிய முதியவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதை எளிதாக்க, இப்போது முதல் ஜூன் 28ஆம் தேதி வரை தீவு முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில குடியிருப்பு வட்டாரங்களில் நடமாடும் கொவிட்-19 தடுப்பூசிக் குழுக்கள் நிறுத்தப்படும்.
அங் மோ கியோ, பிடோக், புக்கிட் மேரா போன்ற வட்டாரங்களில் முதியவர்கள் அதிகம் வசிப்பதால் அவ்விடங்களில் உள்ள வசிப்போர் தொடர்புக் கட்டமைப்புகளிலும் கூடாரங்களிலும் இக்குழுக்கள் இருக்கும்.
கடந்த சில வாரங்களாக கொவிட்-19 தொடர்பில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும் மே 5 முதல் மே 11 வரையில் சுமார் 250 அனுமதிக்கப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.
அதற்கு முந்தைய வாரத்தில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 180ஆக இருந்தது.
காக்கி புக்கிட் சுகாதார விழாவில் மே 25ஆம் தேதி கலந்துகொண்டு பேசிய திரு ஓங், குடியிருப்பாளர்கள் குறிப்பாக முதியவர்கள் தங்களின் பாதுகாப்புக்கு முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறும் கூடுதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரில் பதிவாகி வரும் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களில், மூன்றில் இரண்டு சம்பவங்கள் ‘கேபி.1’, ‘கேபி.2’ துணைத்திரிபுகளால் ஏற்பட்டவை.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ‘கேபி.2’ திரிபு கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.
இருப்பினும், உள்ளூரிலோ அனைத்துலக அளவிலோ மற்ற திரிபுகளைக் காட்டிலும் ‘கேபி.1’, ‘கேபி.2’ வகைகள் எளிதில் பரவக்கூடியவை என்பதற்கோ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கோ எவ்வித அறிகுறியும் தற்போது இல்லை என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய கிருமி அலை ஜூன் மாத இறுதியில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மே 20ஆம் தேதிக்கும் மே 23ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் சுமார் 5,700 பேர் மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்களில் பாதிப் பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.
இதற்கிடையே, ஜூரோங் ஈஸ்ட், செங்காங், உட்லண்ட்ஸ் முதலிய வட்டாரங்களில் அமைந்துள்ள சிங்கப்பூரின் ஐந்து கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையங்கள் கூடுதல் மணிநேரம் செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

