தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்த ஊழியர்களுக்கு மசே நிதிச் சந்தா 1.5% அதிகரிப்பு

2 mins read
c32fd48a-7cfc-4153-9489-92d0e2f80c2b
கோப்புப் படம்: - சாவ்பாவ்

சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளாக இருக்கும் 55லிருந்து 65 வயதுக்கு உட்பட்ட மூத்த ஊழியர்களுக்கு மத்திய சேமநிதி (மசே நிதி) நிரப்புதொகை 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மேலும் 1.5 விழுக்காடு உயர்த்தப்படுகிறது.

மாத வருமானம் $750க்கு அதிகம் உள்ள 55 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் மசே நிதி நிரப்புதொகை 0.5 விழுக்காடு அதிகரித்து 16 விழுக்காடாக இருக்கும். இப்பிரிவு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மசேநிதிக்குப் போகும் நிரப்புதொகையின் விகிதம் ஒரு விழுக்காடு அதிகரித்து 18 விழுக்காடு ஆகும்.

மூத்த ஊழியர்கள், தங்களின் ஓய்வுகாலச் சேமிப்புத் தொகையை அதிகரிக்க உதவுவது இந்நடவடிக்கையின் நோக்கம் என்று பிரதமர் வோங், தமது வரவுசெலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாக மூத்த ஊழியர்களுக்கான மசேநி நிரப்புதொகை விகிதம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் வேலை பார்க்கும் காலம் அதிகரித்து வருவதை இது பிரதிபலிக்கிறது.

மூத்த ஊழியர்களுக்கான மசே நிதி நிரப்புதொகை விகிதத்தை அதிகரிப்பது குறித்த ஆலோசனையை மூத்த ஊழியர்களுக்கான முத்தரப்புச் செயற்குழு 2019ஆம் ஆண்டு முதலில் முன்வைத்தது.

“மூத்த ஊழியர்களுக்கான முத்தரப்புச் செயற்குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப மூத்த ஊழியர்களின் மசே நிதி நிரப்புதொகை விகிதத்தை மறுபடியும் அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம்,” என்றார் நிதி அமைச்சருமான திரு வோங். மூத்த ஊழியர்களுக்கான முத்தரப்புச் செயற்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி அரசாங்கம், 2022லிருந்து ஆண்டுதோறும் மூத்த ஊழியர்களின் மசே நிதி நிரப்புதொகையை அதிகரித்து வந்துள்ளது.

55லிருந்து 60 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களின் மசே நிதி நிரப்புதொகை விகிதத்தைப் படிப்படியாக 37 விழுக்காட்டுக்கு உயர்த்துவது இலக்காகும். இந்த விகிதம், வயது குறைந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் விகிதமாகும்.

அதேபோல், 60லிருந்து 65 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களின் மசே நிதி நிரப்புதொகை விகிதத்தைப் படிப்படியாக 25 விழுக்காட்டுக்கு அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு வாக்கில் இவற்றைச் செய்து முடிப்பது நோக்கமாகும்.

65லிருந்து 70 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களின் மசே நிதி நிரப்புதொகை 12.5 விழுக்காடாக ஆக்கும் இலக்கு எட்டப்பட்டுவிட்டது.

குறிப்புச் சொற்கள்