சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையத்தில் தீப்பற்றிய பாரந்தூக்கி வண்டி

1 mins read
8e440fba-6e59-4076-820d-2a04f422fb7f
வாகனம் தீப்பற்றி எரிவதைக் காட்டும் காணொளி ஒன்று ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. - படம்: இணையம்

சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் அமையவிருக்கும் தளத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) அதிகாலையில் பாரந்தூக்கிச் சரக்கு வண்டி ஒன்று தீப்பற்றிக்கொண்டது.

அதிகாலை 4.45 மணியளவில் 35 தானா மேரா கோஸ்ட் ரோட்டில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

வாகனம் தீப்பற்றி எரிவதைக் காட்டும் காணொளி ஒன்று ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அங்கு குடிமைத் தற்காப்புப் படையின் வாகனமும் அதிகாரிகளும் இருப்பதைக் காண முடிந்தது.

நீரையும் தீத்தடுப்பு நுரையையும் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க சாங்கி விமான நிலையக் குழுமம் மறுத்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்