கருணையைச் செயலாக்கும் முயற்சி: காஸா துயர்துடைக்க புதிய கட்டமைப்பு

கருணையைச் செயலாக்கும் முயற்சி: காஸா துயர்துடைக்க புதிய கட்டமைப்பு

படம்: கிறிஸ்டோ லியோன்

05 Nov 2026 - 7:17 pm

3 mins read

காஸா மக்களுக்கு உதவ அரசாங்கம், மனிதாபிமான அமைப்புகள், பொதுமக்கள் ஆகிய தரப்புகளை ஒன்றிணைக்கும் ‘எஸ்ஜி ஃபார் ஹியூமேனிட்டி’ கட்டமைப்பை சிங்கப்பூர் அமைக்கவுள்ளது.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மதும் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் பே யாம் கெங்கும் வியாழக்கிழமை (நவம்பர் 5) இதனை அறிவித்தனர்.

“தேவைப்படுவோருக்கு உதவ நாம் எப்போதும் இன்னும் அதிகம் செய்ய முடியும் என நம்புகிறேன். இக்கட்டமைப்பு மூலம் இன்னும் அதிகம் உதவ வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூரர்களின் கருணையைச் செயலாக மாற்றுவதே இக்கட்டமைப்பின் நோக்கம்,” என்றார் திரு ஸாக்கி.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ஒருங்கிணைக்கும் இக்கட்டமைப்பில் ஆரம்பக்கட்ட பங்காளிகளாக ஹியூமானிட்டி மேட்டர்ஸ், மெர்சி ரிலீஃப், ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனம், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய நான்கு அமைப்புகள் இடம்பெறும்.

“தேவைப்படுவோருக்கு உதவ சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது நான்கு மனிதாபிமான அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல அமைப்புகள் இணையலாம். காஸா மக்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகளை உதவி தேவைப்படும் உலகின் பிற பகுதிகளிலும் பின்பற்றலாம்,” என்றார் துணை அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீம்.

2023 அக்டோபர் முதல், காஸா மக்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், மனிதாபிமான அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து $25 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளனர்.

உணவு, மருத்துவப் பராமரிப்பு, சுத்தமான குடிநீர், தங்குமிடம், கல்வி ஆகிய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இம்முயற்சிகள் கைகொடுத்தன.

2025ல், காஸாவுக்கான நிதி திரட்டும் முயற்சிகளையும் மனிதாபிமான உதவிகளையும் ஆதரிப்பதற்காக, அரசாங்கம் $1 மில்லியன் தொடக்க நிதியை வழங்கியது. அத்தொகை நான்கு அமைப்புகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஹியூமேனிட்டி மேட்டர்ஸ் அமைப்பின் சிறப்பு ஆலோசகர் ஹசான் அகமது.
ஹியூமேனிட்டி மேட்டர்ஸ் அமைப்பின் சிறப்பு ஆலோசகர் ஹசான் அகமது. - படம்: கிறிஸ்டோ லியோன்

“இக்கட்டமைப்பின் மூலம் ஒவ்வோர் அமைப்பின் பலங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். உதாரணமாக, ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனத்துக்கு நிதி திரட்டுவதில் அனுபவம் உள்ளது. ஹியூமேனிட்டி மேட்டர்ஸ் அமைப்புக்கு பல ஆண்டுகளாக நம்பகமான களப் பங்காளிகள் உள்ளனர்.

“சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அனைத்துலகக் கூட்டமைப்பின் ஓர் அங்கமாக இருப்பதால், எகிப்து போன்ற நாடுகளில் உள்ள எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கட்டமைப்பையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

“இதன் மூலம் உதவி தேவைப்படுவோருக்கு உதவியை விரைவாகவும் திறம்படவும் கொண்டு சேர்க்க முடியும்,” என்றார் ஹியூமேனிட்டி மேட்டர்ஸ் அமைப்பின் சிறப்பு ஆலோசகர் ஹசான் அகமது.

புதிய கட்டமைப்பின் மூலம், அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும். வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புகளுடனான பங்காளித்துவமும் மேம்படுத்தப்படும். நிதி திரட்டுதல், தொண்டூழியத்துடன் பொதுமக்கள் தங்களது தொழில்முறைத் திறன்களையும் நிபுணத்துவத்தையும் கொண்டு பங்களிக்க முடியும்.

கட்டமைப்பில் பங்குபெறும் அமைப்புகள் தங்களது மனிதாபிமானத் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து வழிநடத்தும். அதேவேளையில், வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உதவி தேவைப்படுவோரைச் சென்றடைவதை மேம்படுத்தவும் கட்டமைப்பு வழிவகுக்கும்.

வெளிநாட்டு அதிகாரிகள், மனிதாபிமானப் பங்காளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இந்த முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும். 

இதற்கிடையே, அடுத்த சில வாரங்களில் திரு ஸாக்கி எகிப்து செல்கிறார். காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றும் எகிப்திய அதிகாரிகளையும் மனிதாபிமான பங்காளிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்