கெப்பல் பே பகுதியில் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 29) ஒரு முதலை காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கு நீருக்கு அருகே இருக்கும்போது கவனமாக இருக்குமாறு தேசிய பூங்காக் கழகம், மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. நிலைமையைத் தாங்கள் கண்காணித்து வருவதாகவும் அப்பகுதியில் எச்சரிக்கைக் குறிப்புகளை எழுப்பியுள்ளதாகவும் தேசிய பூங்காக் கழக வனவிலங்கு நிர்வாகப் பிரிவின் குழு இயக்குநரான ஹாவ் சூன் பெங் தெரிவித்துள்ளார்.
நீர் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடும்போது கவனமாக நடந்துகொள்ளுமாறு கழகம், சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கூறியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
கெப்பல் பே நீர்ப்பகுதியில் ஒரு முதலை காணப்பட்டதாக ‘ரிஃப்ளெக்ஷன்ஸ் அட் கெப்பல் பே’ கொண்டோமினிய வீடுகளின் நிர்வாகம் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 30) அதன் குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை அறிக்கை மூலம் தெரியப்படுத்தியது. அப்பகுதிக்கோ லேப்ரடோர் பூங்காவுக்கோ போகும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அந்த கொண்டோமினிய நிர்வாகம், குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டது.
மக்கள் செல்வதற்கான பாதையில் மட்டுமே நடமாடவேண்டும் என்றும் பிள்ளைகளும் செல்லப் பிராணிகளும் எப்போதும் கண்காணிக்கப்படவேண்டும் என்றும் அது அறிவுறுத்தியது.
முதலையைக் கண்டால் அமைதியாக இருந்தபடி அதனிடமிருந்து தள்ளிப் போகுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முதலையைச் சீண்டிப்பார்க்கவோ அதற்கு உணவு ஊட்டுவதோ கூடாது.
ஏதேனும் சம்பவத்தைக் கண்டால் 1800-476-1600 என்ற எண்ணில் தேசிய பூங்காக் கழகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

