சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே டாக்சியில் பயணம் செய்வோர் மே 4ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். மலேசியாவில் ஜோகூர் பாரு உள்ளிட்ட ஜோகூர் மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இது பொருந்தும்.
எல்லை தாண்டிய டாக்சிச் சேவைத் திட்ட மேம்பாடுகளின் ஒரு பகுதியான இந்த நடவடிக்கை குறித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 30) இரு நாட்டுப் போக்குவரத்து அமைச்சுகளும் அறிவித்தன.
புதிய விதிகளின்கீழ், உரிமம் பெற்ற டாக்சிகள் ஜோகூர் பாரு, இஸ்கந்தர் புத்ரி, ஃபாரஸ்ட் சிட்டி, கூலாய், செனாய் போன்ற நகரங்களில் பயணிகளை எங்கு வேண்டுமானாலும் இறக்கிவிடலாம்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் எல்லை தாண்டிய வாடகை கார்ச் சேவைக்கான முதல் உரிமம் கிராப்கார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக, நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு இந்த உரிமம் செல்லுபடியாகும்.
அதாவது, கிராப்கார் நிறுவனம் அதன் வாடகை கார்ச் சேவைத்தளத்தின் மூலம் எல்லை தாண்டிய டாக்சிச் சேவையை வழங்க முடியும்.
இத்தகைய உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் சொந்த நாட்டில் பயணிகளை ஏற்றிக்கொள்வதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் வெளிநாட்டில் அவை இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றிக்கொள்ள முடியும். வாடகை கார்ச் சேவைக்கான முன்பதிவுத் தளத்தின் மூலம் பயணிகளை அவை ஏற்றிக்கொள்ளலாம்.
மலேசிய டாக்சிகள் சிங்கப்பூரில் பான் சான் ஸ்திரீட் மட்டுமன்றி, விவோசிட்டிக்கு அருகில், செஞ்சுரி ஸ்குவேர்க்கு அருகில் எனப் புதிதாக மூன்று இடங்களில் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் டாக்சிகள் ஜோகூர் பாருவின் லார்கின் முனையம் மட்டுமன்றி, மலேசியாவின் டோப்பென் ஷாப்பிங் சென்டர், மிட் வேலி சவுத்கீ கடைத்தொகுதி, அங்சானா கடைத்தொகுதி ஆகிய மூன்று இடங்களிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம்.
இரு நாடுகளும் கூடுதலாகத் தலா 100 டாக்சிகளுக்கு இத்தகைய சேவைக்கான அனுமதியை வழங்கியுள்ளன.

