தெம்பனிஸ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வட்டாரத்தில் வியாழக்கிழமை (ஜூலை 18) நால்வர் காகங்களால் தாக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
அவர்களில் ஒருவர் 59 வயதான துணைப்பாட ஆசிரியர். ஒரு பொட்டலத்தைப் பெற வெளியே சென்று கொண்டிருந்தபோது உச்சந்தலையில் காகம் தாக்கியதில் அவரது தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
தெம்பனிஸ் அவென்யூ 9 புளோக் 485B, திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நண்பகலில் இந்தச் சம்பவம் நடந்ததாக ‘பாய்’ என்ற அந்த பெண், ஷின் மின் நாளிதழிடம் தெரிவித்தார்.
“நான் ஒரு பொட்டலத்தைப் பெறுவதற்காக வாகன நிறுத்துமிடம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு காகம் கீழே இறங்கி என் தலையைக் கொத்த ஆரம்பித்தது. நான் பயந்துபோய் ஓடினேன். பின்னர், எனது உச்சந்தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.
பாய் பின்னர் மருத்துவரைப் பார்த்தார். கிருமித்தொற்றுக்கு எதிரான மருந்துகளும் கிருமிநாசினியும் பரிந்துரைக்கப்பட்டது.
தமது தலையில் கிட்டத்தட்ட ஒன்று முதல் இரண்டு சென்டிமீட்டர் நீளத்துக்கு ஏற்பட்ட காயத்தின் படத்தை அவர் பகிர்ந்துகொண்டதாக ஷின் மின் குறிப்பிட்டது.
அன்று மேலும் மூவர் காகத்தினால் தாக்கப்பட்டனர் என்று ஷின் மின்னிடம் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
பிற்பகல் 1 மணியளவில் வாகனம் நிறுத்துமிடத்தில் காகம் தலையில் கொத்தியதாக 51 வயது மாது ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் இங்கு 24 ஆண்டுகளாக வசிக்கிறேன், ஆனால் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை. அதிர்ஷ்டவசமாக, நான் காயமடையவில்லை, ஆனால் என் தலையில் லேசான வலி உள்ளது,” என்று அவர் கூறினார்.
மற்ற இருவரும் உடன்பிறந்தவர்கள். 26 வயதான குவோ, தம்முடைய தம்பி பள்ளிக்குச் செல்லும் வழியில் காலை 10 மணியளவில் காகம் தாக்கியதாகக் கூறினார். மாலை 4 மணிக்கு வேலையிலிருந்து திரும்பும்போது அவர் தாக்கப்பட்டார்.
வாகன நிறுத்துமிடத்தில் உள்ள 10 மரங்களில் ஐந்தில் காகங்கள் இருப்பதை ஜூலை 18ஆம் தேதி ஷின் மின் செய்தியாளர் கவனித்தார். வீவக அடுக்குமாடியில் அமர்ந்திருந்தவற்றையும் சேர்த்து குறைந்தது 20 காகங்கள் அங்கிருந்ததைப் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.