சிங்கப்பூரில் காகங்களின் எண்ணிக்கையும் அவை குறித்த புகார்களும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தேசியப் பூங்காக் கழகம் காகங்களைத் துப்பாக்கியால் சுடும் நடவடிக்கையை ஈசூனில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தொடங்கியுள்ளது.
2020ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, கடந்த சில ஆண்டுகளில் காகங்கள் தொடர்பான புகார்கள் மூன்று மடங்கு அதிகரித்ததால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் புதன்கிழமை (மார்ச் 24) தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
காகங்களைக் கட்டுப்படுத்தும் மற்ற நடவடிக்கைகளும் தொடரும்
அடுத்த சில வாரங்களில் பீஷான், ஜூரோங், பொங்கோல் உள்ளிட்ட ஒன்பது வட்டாரங்களில் தொடங்கப்படும் இந்த நடவடிக்கை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
காகங்களைச் சுடுவதுடன், அவற்றைப் பிடித்தல், அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் வகையில் கூடுகளை அகற்றுதல் போன்ற மற்ற முறைகளும் தொடரும் என்று சீ ஹொங் டாட் தெரிவித்தார்.
காகங்களின் எண்ணிக்கையும், புகார்களும் பெரிதும் அதிகரிப்பு
சென்ற ஆண்டில் காகம் தொடர்பாக ஏறக்குறைய 15,000 புகார்களை நகராண்மைச் சேவைகள் அலுவலகம் பெற்றது. இது 2020ஆம் ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம். காகங்களின் தாக்குதல் குறித்த புகார்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து 2,000க்குமேல் பதிவானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்
2021இல் 600ஆக இருந்த அகற்றப்பட்ட கூடுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 9,000ஆக உயர்ந்தது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, சுடும் இடங்களில் தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்படும்.
துணைக் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். காகங்கள் உள்ளூர்ப் பறவை இனம் அல்ல என்றும் அவை நகர்ப்புறச் சூழலுக்கு ஏற்ப மாறி, பல்லுயிரியல் சூழலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன என்றும் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காகங்களுக்கு உணவளிப்பதைத் தவிர்க்குமாறு அமைச்சர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

