இஸ்ரேலுடனான உறவுகளை முறிப்பது பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு ஆய்வுக் கழகத்தின் வருடாந்தர மாநாட்டில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) அவர் சிறப்புரையாற்றினார்.
காஸா போர், அதன் உலகளாவிய தாக்கம், அந்த விவகாரம் தொடர்பில் தீர்வு காண்பதில் நிலவும் சவால்கள், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிப்பது ஆகியவை குறித்து முன்வைக்கப்பட்ட பல கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
காஸாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிக்க சிங்கப்பூர் தன்னால் இயன்றவகையில் உதவி வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாலஸ்தீனர்களுக்கு உதவப் பல திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சொன்னார்.
அரசதந்திர உறவுகளைத் துண்டிப்பதைக் காட்டிலும் இத்தகைய செயல்கள் இன்றியமையாதவை என்றார் திரு சண்முகம்.
மேலும், சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கைகள் உணர்ச்சிவசப்படுவதற்கு அப்பாற்பட்டு எதார்த்தமானவையாகவும், நிலையானவையாகவும் திகழ வேண்டும் என்றார் அவர்.
காஸா போரில் இஸ்ரேலின் நிலைப்பாடு தொடர்பில் சிங்கப்பூர் எடுக்க வேண்டிய வலுவான நடவடிக்கை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திரு சண்முகம், இதன் தொடர்பில் பிரதமர் லாரன்ஸ் வோங் சில மாதங்களுக்கு முன்பு பேசிய கருத்துகளை நினைவுகூர்ந்தார்.
இந்த ஆண்டு மே 30ஆம் தேதி, ‘‘காஸாவுக்குள் மனிதநேயப் பொருள்களை அனுமதிக்காமல் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் அனைத்துலகச் சட்டத்தை மீறி இருக்கக்கூடும்,’’ என்று கூறியிருந்தார் திரு வோங்.
தொடர்புடைய செய்திகள்
அதனைச் சுட்டிய திரு சண்முகம் வார்த்தையில் மட்டுமல்லாது செயலிலும் சிங்கப்பூர் செய்த உதவிகள் பற்றி விவரித்தார்.
காஸாவுக்குச் சிங்கப்பூர் இதுவரை ஒன்பது முறை மனிதநேய உதவிகளை நல்கியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து ஏறத்தாழ $22 மில்லியன் மதிப்பிலான உதவிப் பொருள்களை காஸாவுக்கு அனுப்பியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த திரு சண்முகம், அது செயலாக்கம் காண தேவையான மூன்று அம்சங்களைச் சுட்டினார்.
‘‘இது களம்காண உகந்த கட்டமைப்புத் தேவை. எனினும் அத்தகைய கட்டமைப்பு அமையாமல் இருக்க இஸ்ரேல் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும். அடுத்த தேவை, மக்கள்தொகை. இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கைகள் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் குறைக்க அல்லது அவர்களை காஸாவிலிருந்து வெளியேறச் செய்வதாகத் தோன்றுகிறது. சிறப்பாகச் செயல்படக்கூடிய அரசாங்கமும் அவசியம்.
“எனவே, நாட்டை ஆளக்கூடிய நிலைக்கு அவர்களை ஆயத்தப்படுத்தி, அதற்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்திடும் பாலஸ்தீன அதிகாரிகளின் ஆதரவுதான் இதற்கான மெய்யான தேவை,’’ என்று குறிப்பிட்டார் திரு சண்முகம்.

