இணையக்குற்றங்கள்: சிங்கப்பூரர்கள் மூவருக்கு அமெரிக்கா தடை

1 mins read
ad43ef1b-0834-4d77-93ea-7528e15d2c1c
ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் சூப்பர்யாட் உச்சநிலை மாநாடு 2024ல் திரு நைஜெல் டாங் வான் பாவ் நபில் (இடம்) பேசினார். - படம்: சூப்பர்யாட் டைம்ஸ்

அமெரிக்காவும் பிரிட்டனும் இணையக்குற்றங்களின் தொடர்பில் மேற்கொண்டுள்ள பெரிய அளவிலான புலனாய்வில் சிங்கப்பூரர்கள் மூவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூவரில் ஒருவர் சொகுசுக் கப்பலொன்றின் மாலுமியான திரு நைஜெல் டாங் வான் பாவ் நபில். நோன்னி II என்று அழைக்கப்படும் சொகுசுக்கப்பலின் மாலுமி என்று இணையப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க நிதியமைச்சின் அந்நியச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் அக்டோபர் 14ஆம் தேதி திரு டாங், திருவாட்டி சென் ஸியூலிங், திரு ஆலன் இயோ சின் ஹுவாட் ஆகியோருக்குத் தடை விதித்தது. சட்டவிரோதச் செயல்களின் தொடர்பில் தடை விதிக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டோரின் பட்டியலில் அமெரிக்கா அவர்கள் மூவரையும் சேர்த்துள்ளது.

அமெரிக்காவிலோ அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலோ அந்த மூவருக்கும் ஏதேனும் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும். பட்டியலில் இடம்பெற்றிருப்போருடன் அமெரிக்கக் குடிமக்களும் நிறுவனங்களும் பரிவர்த்தனை செய்வதற்கும் தடை விதிக்கப்படும்.

கம்போடியத் தொழிலதிபர் சென் ஜுவையும் அவரின் நிறுவனமான பிரின்ஸ் குழுமத்தையும் குறிவைத்து அமெரிக்கா விசாரணை நடத்துகிறது. அதன் தொடர்பில் திரு டாங், திருவாட்டி சென், திரு இயோ ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்