வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுத் திட்டங்களில் முன்பு ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
இணையக்குற்றங்களின் தொடர்பில் அமெரிக்கா தடைவிதித்துள்ள நிறுவனங்களில் கூன் குழுமமும் ஒன்று. முதலீட்டு நிறுவனமான அந்தக் குழுமம், முதலில் கூன் இஞ்சினியரிங் என்ற பெயரில் 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கப்பூர்ச் சகோதரர்கள்பா ஆங் ஜுய் கூனும் ஆங் ஜுய் ஹியோக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
அங் மோ கியோ தொழில்துறைக் கட்டடத்தின் நான்காம் தளத்தில் நிறுவனம் அமைந்துள்ளது. முன்பு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளுக்கு அது மின்பொறியியல் சேவைகளை வழங்கியது.
கேமன் தீவுகளில் இணைக்கப்பட்ட குழுமம், ஹாங்காங் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ளது. அதன் தலைமையகம் சிங்கப்பூரில் இருக்கிறது. கூன் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக இப்போது இருப்பவர் திரு ஆங் கோக் குவாங். அவர் திரு ஆங் ஜுய் ஹியோக்கின் நெருங்கிய உறவினர்.
அமெரிக்க நிதியமைச்சின்கீழ் செயல்படும் அந்நியச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம், அந்தக் குழுமத்திற்குக் கம்போடியர் சென் ஜுவுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்துகிறது.
இணைய மோசடிகள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் முதலிய குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அமெரிக்கா தடைவிதித்துள்ள 146 தனிமனிதர்கள் அல்லது நிறுவனங்களில் கூன் குழுமமும் ஒன்று.
சீனாவில் பிறந்த செல்வந்தரான சென், அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பெரிய இணைய மோசடிகளின் தொடர்பில் நடத்தப்படும் புலனாய்வுகளில் முக்கிய சந்தேக நபராக விசாரிக்கப்படுகிறார்.
ஃபூஜியான் வட்டாரத்தைச் சேர்ந்தவரான சென், பிரின்ஸ் குழுமத்தின் தலைவர். பன்னாட்டு நிறுவனமான அது, கம்போடியாவில் உல்லாசத்தலங்கள், ஹோட்டல்கள் முதலியவற்றைக் கட்டுவதில் கவனம் செலுத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய இணையக்குற்ற அமைப்பின் பின்னணியில் முக்கியமாக அவர் செயல்பட்டார் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணையின்போது, அமெரிக்க நீதித் துறை வரலாற்றில் ஆகப் பெரிய தொகை கைப்பற்றப்பட்டது.
நியூயார்க் நீதிமன்றத்தில் சென் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அமெரிக்க அதிகாரிகள், குறைந்தது 15 பில்லியன் அமெரிக்க டாலர் ($19.5 பில்லியன்) பெறுமான மின்னிலக்க நாணயத்தைக் கைப்பற்றினர்.
பிரிட்டிஷ் அரசாங்கம், லண்டனில் 112 மில்லியன் பவுண்டைப் ($193.6 மில்லியன்) பறிமுதல் செய்தது.
கூன் குழுமம் சென்னுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி அறிக்கையொன்றை அக்டோபர் 15ஆம் தேதி வெளியிட்டது.
சென் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார். கூன் குழுமம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களின் ஆகப் பெரிய பங்குதாரராக அவர் இருப்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் கண்டறிந்துள்ளது.
அக்டோபர் 23ஆம் தேதி, கூன் இஞ்சினியரிங் அலுவலகத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றபோது அதன் ஊழியர்களும் தலைமை நிர்வாகி அங் கோக் குவாங்கும் கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.

