பேரிடர் மீட்புப் பணிகளில் சைபோர்க் (Cyborg) இயந்திரக் கரப்பான்பூச்சிகளை ஈடுபடுத்த இனிமேல் ஒரே ஒரு நிமிடம் போதும். நெருக்கடிக் காலத்தில் அத்தகைய அதிகமான கரப்பான்பூச்சிகளை உருவாக்க முடியும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்னர் இயந்திரக் கரப்பான்பூச்சியை உருவாக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.
மியன்மாரில் இவ்வாண்டு மார்ச் மாதம் 7.7 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் உலுக்கியபோது 10 சைபோர்க் கரப்பான்பூச்சிகள் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் மீட்பு நடவடிக்கைகளில் உதவின.
கரப்பான்பூச்சிகளின் மேற்பகுதியில் மின்னணுப் பட்டைகள் கட்டப்பட்டிருக்கும். அவற்றில் அகச்சிவப்பு கேமராக்கள், உணர்கருவிகள், மின்முனைக் கம்பிகள் முதலியவை இருக்கும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் திங்கட்கிழமை (ஜூலை 28) தெரிவித்தது. கரப்பான்பூச்சிகளைத் தூண்டிவிடவும் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் அவை கைகொடுக்கும்.
புதிய செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு, ஜப்பான் அறிவியல் தொழில்நுட்ப அமைப்புடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கரப்பான்பூச்சியின் மீது மின்முனைக் கம்பியைப் பொருத்த ஒரு நிமிடம் எட்டு நொடிகள் ஆகும்.
தானியக்க முறையில் சைபோர்க் கரப்பான்பூச்சிகளை உடனடியாக உருவாக்க முடியும். அத்துடன், மனிதத் தவறுகள் ஏற்படுவதையும் குறைக்கமுடியும் என்று என்டியுவின் இயந்திர, வான்வெளிப் பொறியியல் துறைப் பேராசிரியர் ஹிரோடாக்கா சாட்டோ தெரிவித்தார்.
“ஒவ்வொன்றாகச் செய்தால் நீண்ட நேரமாகும். திறன்பெற்ற ஊழியர்கள் தேவை. எங்களின் புத்தாக்க முயற்சி, நெருக்கடி நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சைபோர்க் கரப்பான்பூச்சிகளைத் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தும் கனவை நனவாக்கியுள்ளது,” என்று பேராசிரியர் சாட்டோ கூறினார்.
உள்துறைக் குழுவின் அறிவியல் தொழில்நுட்ப அமைப்புடன் என்டியுவும் கிளாஸ் எஞ்சினியரிங் அண்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனமும் இணைந்து சைபோர்க் கரப்பான்பூச்சிகளை உருவாக்கியுள்ளன.
ஆறு சென்டிமீட்டர் நீளம் கொண்ட இயந்திரக் கரப்பான்பூச்சிகளால் இடிபாடுகளுக்கு இடையில் குறுகிய இடங்களுக்குள் செல்லமுடியும். யாரேனும் உயிருடன் இருந்தால் அந்தத் தகவலையும் அவற்றால் சொல்லமுடியும்.