தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் மணம் கமழ களைகட்டிய பரதச் சுவை

2 mins read
1d28303a-0b76-4329-bc16-a2a7e60c729b
19 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான தனிநபர் பிரிவில் முதல் பரிசு வென்ற அப்சராஸ் ஆர்ட்ஸ் கலைப்பள்ளியைச் சேர்ந்த பிரியா ரமேஷ் (நடுவில்). அவருடன் (இடமிருந்து) ஓம்கார் கலைக் கழகத்தின் கலை இயக்குநர் எஸ். ஸ்ரீதேவி, நற்பணிப் பேரவையின் தலைவர் திரு ரவீந்திரன் கணேசன், பெக் கியோ சமூக நிலைய இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் திரு ஜெகதீஷ் இளங்கோ. - படம்: ஓம்கார் கலைக் கழகம்
multi-img1 of 4

தமிழ்மொழி விழாவை ஒட்டி ‘கவியும் நாட்டியமும்’ போட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 19) பிற்பகல் 3.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.

இப்போட்டி பெக் கியோ சமூக நிலையத்தில் நடைபெற்றது.

பெக் கியோ சமூக நிலைய இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் ஓம்கார் கலைக் கழகமும் இணைந்து வழங்கிய இப்போட்டிக்கு வளர்தமிழ் இயக்கமும் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவும் ஆதரவு வழங்கின.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நற்பணிப் பேரவையின் தலைவர் திரு ரவீந்திரன் கணேசன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நடுவர்களாக திருவாட்டி ரஞ்சனி ரங்கன், திருவாட்டி பிரமிளா பாலகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.

இப்போட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

முதல் பிரிவு 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கான தனிநபர் போட்டி.

இரண்டாவது பிரிவில் 19 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் களமிறங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

மூன்றாவது பிரிவில் நடனமணிகள் குழுக்களாகப் போட்டியிட்டனர்.

பரதநாட்டியப் போட்டி என்றபோதிலும் தமிழ்மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நடனமணிகள் தமிழ் பாடல்களுக்கு மட்டுமே அபிநயம் செய்ய வேண்டும் என்பது போட்டி விதிமுறைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது, நடனம் ஆடுவதற்கு முன்பு அவர்கள் அதைப் பற்றி தமிழ்மொழியில் விளக்கம் தர வேண்டும்.

நடனமணிகளின் நடன ஆற்றலுக்கு மட்டுமன்றி அவர்கள் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் புள்ளிகள் வழங்கப்பட்டன.

போட்டியில் பங்கெடுத்த இளம் நடனமணிகள், அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் முன் வந்து தன்னம்பிக்கையுடன் சரளமாகத் தமிழில் பேசியது பார்ப்போர் மனதை வெகுவாகக் கவர்ந்து பெருமிதம் அடையச் செய்தது.

ஒருசில நடனமணிகளின் தாய்மொழி தமிழ் இல்லாதபோதிலும் தமிழில் பேச அவர்கள் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டி அரங்கில் கூடியிருந்தோர் கரவொலி எழுப்பினர்.

போட்டியாளர்கள் பேசிய தமிழ்மொழி செவிக்கு விருந்தளிக்க, அவர்களது நடனம் கண்களுக்கு விருந்தளித்தது.

12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான பிரிவில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார் சக்தி நுண்கலைக் கூடத்தைச் சேர்ந்த மேகனா போசா.

19 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான பிரிவில் ‘அப்சராஸ் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளியைச் சேர்ந்த பிரியா ரமேஷ் வாகை சூடினார்.

குழுப் பிரிவில் சக்தி நுண்கலைக் கூடம் முதல் பரிசு வென்றது.

“இப்போட்டி ஐந்தாவது முறையாக நடத்தப்படுகிறது. முதல் ஆண்டில் பங்கெடுத்த நடனமணிகள் தமிழில் பேச சிரமப்பட்டனர். ஆனால், காலப்போக்கில் இந்த நிலை மாறிவிட்டது. போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நடனமணிகள் பாடல்களுக்கான விளக்கத்தைத் தமிழில் எழுதி, மனப்பாடம் செய்து பார்வையாளர்களின் முன் நின்று பேசுகின்றனர்.

“பாடல் வரிகளின் பொருளை அவர்கள் நன்கு ஆராய்ந்து பார்வையாளர்களுக்கு அவற்றைப் பற்றி எடுத்துரைக்கின்றனர். இந்த ஐந்து ஆண்டுகளில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,” என்று ஓம்கார் கலைக் கழகத்தின் கலை இயக்குநர் எஸ். ஸ்ரீீதேவி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்