தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுப்பிக்கப்படும் டாருசலாம் பள்ளிவாசல்

2 mins read
3675d3d1-bb3f-4b5a-a0f0-223ab2d61535
டாருசலாம் பள்ளிவாசலுக்கு நேரில் சென்ற முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌ஷால் இப்ராடிஹிம் (சிவப்பு நிறச் சட்டை). - படம்: பெரித்தா ஹரியான்

வரும் செப்டம்பர் மாதம் முதல் கிளமெண்டியில் உள்ள 37 ஆண்டுப் பழமையான டாருசலாம் பள்ளிவாசல் 10.3 மில்லியன் வெள்ளிச் செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது.

அதோடு, புதிய தெங்கா வட்டாரத்தில் உள்ள ஃபாரஸ்ட் டிரைவ் சாலையில் வருங்காலத்தில் பள்ளிவாசல் கட்ட ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபை‌ஷால் இப்ராஹிம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 11) டாருசலாம் பள்ளிவாசலுக்குச் சென்றபோது அவர் இவற்றை அறிவித்தார்.

சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பள்ளிவலாசல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன; அது தொடர்பான நடவடிக்கைகளில் டாருசலாம் பள்ளிவாசல் புதுப்பிப்புப் பணிகள் அடங்கும் என்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஃபை‌ஷால் குறிப்பிட்டார்.

ஆக அண்மையில் ஈசூனில் உள்ள டாருல் மாக்முர் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டது. ஈராண்டுகளாக 15 மில்லியன் வெள்ளிச் செலவில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு அப்பள்ளிவாசல் கடந்த ஜூன் மாதம் ஹஜ்ஜுப் பெருநாளன்று திறக்கப்பட்டது. டாருசலாம் பள்ளிவாசலின் புதுப்பிப்புப் பணிகள் ஈராண்டுகளுக்கு நடைபெறும். அந்தக் காலகட்டத்தில் பள்ளிவாசல் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று உள்துறை மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஃபை‌ஷால் சொன்னார்.

புதுப்பிப்புப் பணிகளின்கீழ் டாருசலாம் பள்ளிவாசலில் இரண்டு தள வளாகம், மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படும். கூட்டம் கூடுதல் சீராக நகர இவ்வசதிகள் செய்துதரப்படும்.

தெங்காவில் புதிய பள்ளிவாசலுக்கான வடிவமைப்புத் திட்டங்கள் 2027ஆம் ஆண்டு தொடங்கும் என்று டாக்டர் ஃபை‌ஷால் தெரிவித்தார். அப்பள்ளிவாசலுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்