தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பர் 14ல் தீபாவளி ஒளியூட்டு

2 mins read
இந்த ஆண்டு 64 நாள்கள் மிளிரவிருக்கும் லிட்டில் இந்தியா
c839b7e1-72cb-4283-aaa9-da99d2fd15c5
இந்த ஆண்டுக்கான தீபாவளிக் கொண்டாட்டம் தொடர்பான செய்தியாளர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) நடைபெற்றது. - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 2

‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், இந்த ஆண்டு ‘குடும்பம்’ எனும் கருப்பொருளில் தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தீபாவளி ஒளியூட்டு விழா இந்த வாரம் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறவிருக்கிறது. ஒளியூட்டு நிகழ்ச்சியை அடுத்து நவம்பர் மாதம் 17ஆம் தேதி வரை 64 நாள்களுக்கு லிட்டில் இந்தியா சாலைகள் மிளிரவுள்ளன.

சனிக்கிழமை மாலை பிர்ச் சாலையில் நடைபெறவிருக்கும் ஒளியூட்டு விழாவில் மூத்த அமைச்சர் தியோ சீ ஹியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.

ஒளியூட்டைத் தொடர்ந்து மீடியாகார்ப் வசந்தம் ஒளிவழி, இரவு முழுவதும் பொதுமக்கள் கண்டு மகிழும் வண்ணம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தீபாவளிப் பண்டிகைக்காக ‘லிஷா’ ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு குடும்பங்களை மையப்படுத்திப் பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

வழக்கம்போல கேம்ப்பெல் சாலையில் தீபாவளி விற்பனைக்காகக் கடைகள் அமைக்கப்படும். சுற்றுப்பயணிகளும், பொதுமக்களும் தீபாவளிப் பண்டிகை பற்றியும், இந்தியக் கலாசாரத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் ‘லிஷா’ இந்த ஆண்டு புதிதாகப் புதையல் வேட்டை விளையாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இரண்டாவது முறையாக ‘பிக் பஸ்’ பேருந்துச் சுற்றுலாவுக்கும் அது ஏற்பாடு செய்துள்ளது. சென்ற ஆண்டு இதற்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்ததால் அந்தச் சுற்றுலா மீண்டும் நிகழ்ச்சிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

‘தேக்கா ராஜா’ யானை உருவச் சின்னம் மீண்டும் இம்முறை இடம்பெறும். சிறுவர்கள் அதனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

புகழ்பெற்ற உள்ளூர்ச் சமையல் வல்லுநர் அரிஃபின், தேக்கா பிளேஸ் கடைத்தொகுதியிலும், ஜூனியர் குப்பண்ணா உணவகத்திலும் நேரடியாகச் சிறப்பு உணவு வகையைச் செய்து காட்டுவார்.

பொதுமக்களுக்காகப் பூ கட்டுதல், ரங்கோலி வரைதல் போன்ற பயிலரங்குகளுக்கு ‘லிஷா’ ஏற்பாடு செய்துள்ளது. வெளிநாட்டு ஊழியர்களை உள்ளடக்கும் வகையில் அவர்களுக்கான போட்டிகளும் நடைபெறவுள்ளன.

“பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் பலருக்குக் குடும்பத்தினருடன் ஒன்றாக நேரம் செலவிட முடியாமல் போகிறது. இதனால் தீபாவளி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது குடும்பம் என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்தோம். இதன் மூலம் குடும்பப் பிணைப்பு அதிகரிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை,” என்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ‘லிஷா’ தலைவர் ரெகுநாத் சிவா கூறினார்.

இந்திய மரபுடைமை நிலையம், சிண்டா ஆகிய அமைப்புகளும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. சிண்டா ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் அதன் புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு மீண்டும் இவ்வாண்டு ஏற்பாடு செய்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு https://www.deepavali.sg/ , https://ihc-programmes.peatix.com/events ஆகிய இணையத்தளங்களை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்