தீபாவளி வாழ்த்து: சமூக ஊடகங்களில் உள்துறைக் குழுக்களின் அசத்தல் காணொளிகள்

தீபாவளி வாழ்த்து: சமூக ஊடகங்களில் உள்துறைக் குழுக்களின் அசத்தல் காணொளிகள்

பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு
படம்: த.கவி

08 Nov 2026 - 9:32 pm

2 mins read

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உள்துறை அமைச்சின்கீழ் இயங்கும் உள்துறைக் குழு அமைப்புகளும் இதர அரசாங்க அமைப்புகளும் மக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் புதுமையான, சுவாரசியமான காணொளிகளைத் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ளன. அவை இணையவாசிகள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

பாதுகாப்பு தொடர்பான செய்திகளை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க சினிமா, தற்போதைய சமூக ஊடகப் போக்குகளை மையமாகக் கொண்டு இந்தக் காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கியப் பதிவுகளின் தொகுப்பு இதோ:

‘ஐசிஏ கா ஹுக்கும்!’: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) ஃபேஸ்புக் பக்கத்தில் தற்போதைய பாடலைப் பயன்படுத்தி ஒரு சுவாரசியமான ‘ரீல்’ காணொளியைப் பகிர்ந்துள்ளது.

துவாஸ் சோதனைச்சாவடியில் பணிபுரியும் அதிகாரிகள், பண்டிகைக் காலத்தில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு, நவீனமயமாக்கல் பணிகளைப் பொதுமக்களுக்குத் திரைப்படப் பாணியில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

View post on Instagram
 

‘யூனிஃபார்ம் புளூ முதல் பாரம்பரிய உடைகள் வரை’: காவல்துறை

சிங்கப்பூர்க் காவல்துறை, லிட்டில் இந்தியா தீபாவளிச் சந்தைகளில் நிலவும் பண்டிகை உணர்வையும் வண்ணங்களையும் உணவுகளையும் பிரதிபலிக்கும் வகையில் டிக்டாக் பக்கத்தில் சிறப்பு விழிப்புணர்வுக் காணொளியை வெளியிட்டுள்ளது.

மக்கள் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அது நினைவூட்டுகிறது. மேலும், மத்திய காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் நீல நிற சீருடையிலிருந்து பாரம்பரிய இந்திய உடைகளுக்கு மாறுவதைக் காட்டும் காணொளி இணையவாசிகளைக் கவர்ந்துள்ளது.

‘ஜெயிலர் 2’ பாணியில் சிங்கப்பூர் சிறைத்துறை

சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரிகள், நீண்ட வார இறுதியிலும் நாட்டின் பாதுகாப்பைக் காக்க தங்களின் கடமையை எவ்வாறு அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள் என்பதை நகைச்சுவை, திரைப்படப் பாணியில் விவரித்துள்ளனர்.

கேப்டன்ஸ் ஆஃப் லைவ்ஸ் (#CaptainsOfLives) என்ற ஹேஷ்டேக்குடன், #Jailer2 என அவர்கள் பதிவிட்டுள்ள காணொளி, அதிகாரிகளின் சளைக்காத உழைப்பைக் காட்டுகிறது.

View post on Instagram
 

‘பாதுகாப்பு ஒளியை ஏற்றிவைக்கட்டும்': சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் வீட்டில் விளக்குகளையும் மெழுகுவர்த்திகளையும் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டிய தீப்பாதுகாப்பு வழிமுறைகளைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை நினைவூட்டியுள்ளது.

விளக்குகளை ஏற்றிய பின், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களிலிருந்து தள்ளியிருப்பதை உறுதி செய்யுமாறும் பயன்பாட்டிற்குப் பின் அவற்றை முறையாக அணைத்துவிடுமாறும் ‘பாதுகாப்பு ஒளியை ஏற்றிவைக்கட்டும்!’ (Let safety light the way!) என்ற வாசகத்துடன் விழிப்புணர்வுப் பதிவை வெளியிட்டுள்ளது.

‘ஃபேமிலி அசெம்பல்’: gov.sg

அரசாங்கத் தகவல் ஊடகமான gov.sg, டிஎஸ்டிஎன்சிடி நிறுவனத்துடன் இணைந்து தமிழ்மொழியில் ஒரு சுவாரசியமான குறும்படத்தை வெளியிட்டுள்ளது.

ஒரு குடும்பத்தினர் தீபாவளிப் பண்டிகைக்காக ஒன்றுகூடும் காட்சி அதிரடித் திரைப்படம் போன்ற பாணியில் நகைச்சுவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் கைப்பேசித் திரைகளைப் பார்ப்பதைத் தவிர்த்து, குடும்பத்துடன் உண்மையான மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதை இக்காணொளி வலியுறுத்துகிறது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்