தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பர் 6ல் தீபாவளி ஒளியூட்டு (நேரலை இணைப்பு உள்ளே)

3 mins read
ff5e0dbf-eebd-41c1-b14a-24db45276faf
இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக சிராங்கூன் சாலையில் இடம்பெறும் தீபாவளி அலங்காரங்கள். - படம்: த.கவி
multi-img1 of 2
Watch on YouTube

இவ்வாண்டிற்கான தீபாவளி ஒளியூட்டு விழா வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 6) சிராங்கூன் சாலையில் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

முதன்முறையாக, சிராங்கூன் சாலை முழுவதும் மூடப்பட்டு, அதில் அற்புதமான சாலை அணிவகுப்பும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இந்த ஒளியூட்டு விழா, இம்முறை ‘ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது.

இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்ட ஏற்பாடுகள் பற்றி விவரங்களைப் புதன்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ‘லிஷா’ பகிர்ந்துகொண்டது.

புதன்கிழமை (செப்டம்பர் 3) செய்தியாளர்களைச் சந்தித்த ‘லிஷா’.
புதன்கிழமை (செப்டம்பர் 3) செய்தியாளர்களைச் சந்தித்த ‘லிஷா’. - படம்: த.கவி

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் ‘உத்சவ்’ சாலை அணிவகுப்பு, தேக்கா சந்தை எதிரில் அமைக்கப்படும் ‘கிராண்ட் ஸ்டாண்ட்’ பகுதியில் தொடங்கி, வீராசாமி சாலை முன்பும், அங்குலியா பள்ளிவாசல் முன்பும் மூன்று பகுதிகளில் இடம்பெறும்.

இதனை முன்னிட்டு, ஹேஸ்டிங்ஸ் ரோடும் சிராங்கூன் சாலையின் ஆக வலது தடமும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிவரை மூடப்படும்.

நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று சிராங்கூன் சாலை சனிக்கிழமை நண்பகல் 12 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிவரை புக்கித் தீமா ரோடு முதல் கிச்சனர் ரோடு வரை முழுவதும் மூடப்படும்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, பார்வையாளர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு ‘லிஷா’ கேட்டுகொண்டுள்ளது.

சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கவிருக்கும் ஒளியூட்டு நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தீபாவளி ஒளியூட்டை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைப்பார்.

அவருடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.

பொதுமக்கள் சாலைகளின் ஓரத்தில் தடுப்புச் சுவர்களுக்குப் பின்னால் நின்று அணிவகுப்பைப் பார்வையிடலாம். சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் வருகையளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் உள்ளிட்ட பலதரப்பட்ட பண்பாட்டு அமைப்புகளைச் சேர்ந்த மொத்தம் 26 குழுக்கள் சாலை அணிவகுப்பில் கலந்துகொள்கின்றன.

இரவு 10 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளியூட்டு நிகழ்ச்சியை அடுத்து நவம்பர் மாதம் 9ஆம் தேதிவரை 64 நாள்களுக்கு நாள்தோறும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 2 கிலோமீட்டர் தொலைவிற்குச் சிராங்கூன் சாலை வண்ண விளக்குகளால் ஒளிவெள்ளத்தில் மின்னும்.

- படம்: த.கவி

தீபாவளிப் பண்டிகையொட்டி ‘லிஷா’ ஆண்டுதோறும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டு செப்டம்பர் 12 முதல் நவம்பர் 11 வரை மொத்தம் 12 நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வழக்கம்போல கேம்பல் லேனில் தீபாவளி விற்பனைக்காகக் கடைகள் அமைக்கப்படும். அத்துடன் புதையல் வேட்டை, பொதுப் போக்குவரத்து இடங்களில் தீபாவளி வண்ணச் சுவரொட்டிகள், ‘பிக் பஸ்’ சுற்றுலாக்கள் ஆகியனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், புகழ்பெற்ற உள்ளூர் சமையல் வல்லுநர் அரிஃபின், சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு, 60 பிரியாணி வகைகளை 60 நிமிடங்களில் நேரடியாகச் சமைத்து சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கவுள்ளார்.

பொதுமக்களுக்காகப் பூ கட்டுதல், ரங்கோலி வரைதல், சேலை மற்றும் வேட்டி அணிதல் போன்ற பயிலரங்குகளுக்கும் ‘லிஷா’ ஏற்பாடு செய்துள்ளது.

இதனிடையே, ஆண்டுதோறும் இடம்பெறும் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்தையும் சிண்டா முன்னெடுத்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பின் ஒரு பகுதியாக, முதியவர்களுக்கு உதவும் பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுக்க ‘லி‌‌‌ஷா’விற்கும் ஸ்ரீ நாராயண மி‌‌ஷனுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

‘லி‌‌‌ஷா’விற்கு ஸ்ரீ நாராயண மி‌‌ஷனுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
‘லி‌‌‌ஷா’விற்கு ஸ்ரீ நாராயண மி‌‌ஷனுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. - படம்: த.கவி

“லிஷாவின் 25வது ஆண்டுநிறைவு, சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் என இரு முக்கிய நிகழ்வுகளை ஒட்டி, ‘ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்’ எனும் கருப்பொருளைத் தேர்ந்தெடுத்தோம். மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, மகிழ்ச்சியாக நேரம் செலவிட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார் லிஷா தலைவர் ரகுநாத் சிவா.

தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்த மேல் விவரங்களை www.deepavali.sg இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாண்டு அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்