தீபாவளி என்றாலே வாழ்வின் நன்மைகளைக் கொண்டாடி மகிழ்வது. அதை மத்தாப்புகள் சிதற, சொந்தங்கள் சூழக் கொண்டாடுவது கூடுதல் சிறப்பு என்கிறார் குமாரி சான் வான் டிங், 30.
இந்திய மருமகளாகத் தமிழ்க் குடும்பத்தில் விளக்கேற்ற இருக்கிறார் குமாரி சான். தீபாவளி எதற்காக? வாசலில் கோலமிடுவது எதனால்? வழிபாட்டுச் சடங்குகளின்போது தேங்காய் உடைப்பது ஏன்? எனக் குமாரி சான் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் சுவாரசியமாக விளக்கம் தருகிறார் அவருடன் வாழ்க்கைப் பயணத்தில் இணையவிருக்கும் 33 வயதான திரு சதாசிவம் லோகராஜ்.
“தீபத் திருநாளின்போது நாம் கடைப்பிடிக்கும் மரபுகளைச் சீன இனத்தவரான திருவாட்டி வானுக்கு விவரிக்கும்போது என்னுடைய அனுபவங்களும் சேர்ந்தே மறுமலர்ச்சி பெறுகின்றன. குமாரி சான் எங்கள் குடும்பத்தில் புதுவரவாகச் சேரவிருப்பது சிறப்புமிக்க தருணம்.
“சென்ற ஆண்டு தீபாவளியின்போது குடும்பத்தில் உள்ள உறவினர்கள் அனைவருக்கும் அவரை அறிமுகப்படுத்தியது பண்டிகையின் களிப்பை இரட்டிப்பாக்கியது,” என்று சொன்னார் திரு சதாசிவம்.
சதாசிவத்தின் பெற்றோர் இல்லம் அமைந்துள்ள பாசிர் ரிசில் காலை பத்துப் பேருடன் தொடங்கும் தீபாவளி, நாள் முழுதும் உணவு, உபசரிப்பு, இசை என ஏறத்தாழ முப்பது பேருடன் நிறைவுறும் என்று கூறிய திரு சதாசிவம், இத்திருநாளின் முக்கிய அம்சமாகத் தாம் கருதும் நிகழ்வைக் குறித்தும் தெரிவித்தார்.
“புத்தாடை உடுத்தி, கூட்டாக வழிபட்டு, ஒன்றாக உணவருந்துவது எனப் பண்டிகை நாள் நீண்டுகொண்டே இருந்தாலும், அவற்றிற்கிடையே பெற்றோர், பெரியோர் பாதம் தொட்டு நல்லாசி பெற்றுக்கொள்ளும் தருணம் மனத்திற்கு மிகவும் பிடித்தமானது,” என்றார் திரு சதாசிவம்.
தீபாவளித் திருநாளின்போது உணவைச் சுவைக்கத் தாம் மிகவும் ஆவலுடன் காத்திருப்பது உண்டு என்று சொன்ன குமாரி சான், தீபாவளி விருந்தில் இடம்பெறும் லட்டு, பாயசம் ஆகியவை தன் உள்ளத்தை வென்ற இந்திய உணவுகள் என்றும் கூறினார்.
குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து வண்ணக் கோலமிடுவதும், தம் தாயாருடன் சேர்ந்து குமாரி சான் கடந்த ஆண்டு முதன்முறையாகப் புடவை அணிந்த நிகழ்வும் மறக்க முடியாதவை என்று குறிப்பிட்ட திரு சதாசிவம், தீபாவளி முழுதும் வாசலெங்கும் நிறைந்திருக்கும் தோரணங்களும், எவரையும் வரவேற்கத் திறந்தே இருக்கும் தமது இல்ல வாயிற்கதவுகளும், வருவோர் உண்டு மகிழ அணிவகுத்திருக்கும் உணவுவகைகளும் பொழிந்திடும் தீபாவளி உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றார்.
இம்முறை திரு சதாசிவம் குடும்பத்தினருடன் இணைந்து தீபத் திருநாளில் மூழ்கிடக் காத்திருக்கும் குமாரி சான், “குடும்பப் பிணைப்பு, பெரியவர்கள், மற்றும் சமூகத்தில் உள்ளவர்களுக்கும் சேவையாற்றும் பாங்கு இவையனைத்தும் எங்கள் இருவரின் பண்பாட்டிலும் நிறைந்துள்ளது.
“திரு சதாவின் குடும்பத்தினர் தீபாவளி ஒன்றுகூடலில் நான் பங்கேற்க முழுமையாக இடங்கொடுக்கின்றனர். பிற இனத்தவரையும் இன்முகத்துடன் வரவேற்கும் இந்தியக் கலாசாரத்தின் இந்த பாங்கும், பாரம்பரியங்கள் ஒன்றிணையும் இந்தப் பண்டிகையும் ஒற்றுமையைப் பறைசாற்றும் சமத்துவப் பண்டிகையாக தீபாவளியைத் திகழச் செய்கிறது,” என்றார் குமாரி சான்.

