பிளஸ், பிரைம் வீவக வீடுகளுக்கான தேவை குறைந்தது

பிளஸ், பிரைம் வீவக வீடுகளுக்கான தேவை குறைந்தது

3 mins read
24decde7-6055-407f-8b17-70651057540f
தோ பாயோ வட்டாரத்தில் உள்ள வின் கிம் கியட் கிரெஸ்ட் திட்டத்தில் மூன்று மற்றும் நான்கு அறை வீடுகளுக்கு விண்ணப்பித்த முதல்முறை விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் வீடு கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற குறைந்த தேவை என்பது ஒரு காலத்தில் அரிதான ஒன்றாக இருந்தது. - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

பிப்ரவரி மாதம் நடைபெற்ற அண்மைய தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) வீடுகளுக்கான விற்பனை நடவடிக்கையின் முடிவில், தோ பாயோ வட்டாரத்தில் உள்ள வின் கிம் கியட் கிரெஸ்ட் திட்டத்தில் மூன்று மற்றும் நான்கு அறை வீடுகளுக்கு விண்ணப்பித்த முதல்முறை விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் வீடு கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற குறைந்த தேவை என்பது ஒரு காலத்தில் அரிதான ஒன்றாக இருந்தது.

ஆனால், தற்போதைய ஸ்டாண்டர்ட், பிளஸ் மற்றும் பிரைம் வகை முறையின்கீழ், பிளஸ் திட்டமான கிம் கியட் கிரெஸ்ட் போன்ற கடுமையான மறுவிற்பனை நிபந்தனைகளைக் கொண்ட வீடுகளுக்கு முதல்முறை விண்ணப்பதாரர்களிடையே வரவேற்பு குறைவாகவே உள்ளது.

குறிப்பாக, வசிப்பிடத்துக்காக மக்களால் அதிகம் நாடப்படாத இடங்களில் அமைந்துள்ள பிளஸ் திட்டங்கள் மற்றும் பிரைம் திட்டங்களில் உள்ள மூவறை வீடுகள் தொடர்பாக இந்த மந்தநிலை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத் தேக்கநிலை காரணமாக, விற்பனையாகாத மீதமுள்ள வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பிரைம் மற்றும் பிளஸ் வீடுகள் பொதுவாக நகர மையத்திற்கு அருகிலும் போக்குவரத்து வசதிகள் மற்றும் இதர வசதிகளுக்கு மிக அருகிலும் அமைந்திருக்கும். இதனால், இந்த வீடுகளுக்குப் பத்தாண்டு கால குறைந்தபட்ச வசிப்பிடக் காலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வகை வீடுகளை விற்கும்போது அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை அரசிடம் திருப்பிச் செலுத்தும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் வீடுகளைக் காட்டிலும் பிரைம் வீடுகளை விற்கும்போது திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை கூடுதலாக இருக்கும்.

வசிப்பிடம் அடிப்படையில், மக்கள் அதிகம் விரும்பும் இடங்களில் உள்ள வீடுகளை ஐந்து ஆண்டுகள் கழித்து விற்று அதிக லாபம் ஈட்டும் ‘லாட்டரி விளைவை’ கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதற்கு நேர்மாறாக, ஸ்டாண்டர்ட் வீடுகளுக்கு ஐந்து ஆண்டு காலக் குறைந்தபட்ச வசிப்பிடக் காலம் மட்டுமே உண்டு, மானியத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

2021ஆம் ஆண்டில், கடுமையான கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்பு, புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன், தோ பாயோ மற்றும் காலாங்/வாம்போ ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு அறை வீடுகளுக்கு, ஒரு வீட்டிற்கு ஐந்து பேர் வரை போட்டியிட்டனர்.

ஆனால், அண்மைய விற்பனையில் புக்கிட் மேராவின் ரெட்ஹில் பீக்ஸ் திட்டத்தில் மூவறை வீடுகளுக்கான முதல்முறை விண்ணப்ப விகிதம் ஒன்றுக்கும் குறைவாகவே இருந்தது. அதே திட்டத்தில் நான்கு அறை வீடுகளுக்கு ஒரு வீட்டிற்கு இரண்டு பேருக்கும் மேல் போட்டியிட்ட போதிலும், மூவறை வீடுகளுக்கு வரவேற்பு இல்லை.

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத விற்பனையிலும், அங் மோ கியோவில் உள்ள ஓக் வில் என்ற பிளஸ் திட்டத்தில் மூன்று மற்றும் நான்கு அறை வீடுகளுக்கு முதல்முறை விண்ணப்பதாரர்களிடையே வரவேற்பு குறைவாகவே காணப்பட்டது.

இதன் விளைவாக, பிப்ரவரி விற்பனை நடவடிக்கையில் ஏறத்தாழ 4,320 விற்பனையாகாத மீதமுள்ள வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. இது வீவக தொடக்கத்தில் உறுதியளித்த 3,000 வீடுகளை விட அதிகமாகும்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கொண்ட ஆய்வில், விற்பனையாகாமல் மீதமுள்ள வீடுகளாக எஞ்சியிருந்தவற்றில் 22 பிரைம் அல்லது பிளஸ் திட்டங்கள் அடங்கும் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பிரைம் திட்டங்களில் உள்ள மூவறை வீடுகளுக்குத் தொடர்ந்து குறைந்த விண்ணப்ப விகிதமே பதிவாகி வருகிறது.

பிப்ரவரி 11ஆம் தேதியன்று விற்பனை முடிவடைந்த பின்னரும், குவீன்ஸ்டவுன் பகுதியில் உள்ள பிரைம் மற்றும் ஸ்டாண்டர்ட் வீடுகளின் கலவையான மூன்று மற்றும் நான்கு அறை வீடுகளுக்கு முதல்முறை விண்ணப்பதாரர்களிடையே போதிய வரவேற்பு இல்லை.

குறிப்புச் சொற்கள்