2025ல் டெங்கிச் சம்பவங்கள் 7 ஆண்டு காணாத வீழ்ச்சி

2 mins read
d3601c2e-c2a1-4636-9c08-86293db83295
2025ஆம் ஆண்டில் டிசம்பர் 26ஆம் தேதி நிலவரப்படி, 3,990 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது கிட்டத்தட்ட 70 விழுக்காடு குறைவு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏழாண்டு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது.

இவ்வாண்டு டிசம்பர் 26ஆம் தேதி நிலவரப்படி, 3,990 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. கடந்த ஆண்டின் 13,651 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் அது கிட்டத்தட்ட 70 விழுக்காடு குறைவு. தேசியச் சுற்றப்புற வாரியம் அந்தத் தகவலை வெளியிட்டது.

2018க்குப் பிறகு டெங்கிக் காய்ச்சல் கண்டோரின் எண்ணிக்கை ஆகக் குறைவான நிலையை எட்டியிருப்பது இப்போதுதான். 2018ல் 3,282 சம்பவங்கள் பதிவாயின.

இவ்வாண்டில் டெங்கிக் காய்ச்சல் கண்டு நால்வர் மாண்டனர். சென்ற ஆண்டு, 17 பேர் உயிரிழந்தனர்.

டெங்கிக் காய்ச்சல் ஏற்படும் சம்பவங்கள் குறைந்ததற்கு வொல்பாக்கியா திட்டம் போன்ற முயற்சிகள் உதவியதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு மே மாதம் தெரிவித்தது.

ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது திட்டத்தின் நோக்கம். அதன்படி, ஆய்வுக்கூடத்தில் வொல்பாக்கியா கிருமி செலுத்தப்பட்டு வளர்க்கப்படும் ஆண் கொசுக்கள் வெளியே விடப்படுகின்றன.

அத்தகைய ஆண் கொசுக்களுடன் ஏடிஸ் பெண் கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகையில், அவற்றின் முட்டைகள் குஞ்சுகளைப் பொரிக்கமாட்டா.

இவ்வாண்டு, டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சிகண்டதற்கு வொல்பாக்கியா திட்டம் முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹோக் பொது சுகாதாரப் பள்ளிப் பேராசிரியர் சு லி யாங் கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டில் திட்டம் கணிசமான அளவு விரிவுபடுத்தப்பட்டதை அவர் சுட்டினார். இப்போது அத்திட்டத்தின்கீழ் 580,000க்கும் மேற்பட்ட வீடுகள் வருகின்றன.

இருப்பினும் திட்டத்தின் பங்கு எந்த அளவுக்கு உதவியிருக்கிறது என்பதை மதிப்பிடுவது சிரமம் என்றார் பேராசிரியர் சு. அண்மை ஆண்டுகளில் டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக இருந்துள்ளன.

டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை 2020ல் உச்சம் தொட்டது. அப்போது 35,315 சம்பவங்கள் பதிவாயின. அடுத்த ஆண்டு அவை 5,258க்குக் குறைந்தன. பின்னர் 2022ல் 32,325க்குக் கூடிய டெங்கிச் சம்பவங்கள், மறு ஆண்டில் 9,949க்குச் சரிந்தன.

வொல்பாக்கியா திட்டத்தின் பங்களிப்பு எவ்வளவு என்பது அடுத்த இரண்டு, மூன்று ஆண்டில் தெளிவாகத் தெரியக்கூடும் என்று பேராசிரியர் சு தெரிவித்தார்.

திட்டத்தின்கீழ், 800,000 வீடுகளை அல்லது இங்குள்ள வீடுகளில் கிட்டத்தட்ட பாதியை அடுத்த ஆண்டுக்குள் கொண்டுவருவது இலக்கு.

டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கையின் வீழ்ச்சிக்குத் தற்போது பரவும் டெங்கிக் கிருமி வகைக்கு எதிரான கூட்டுத் தடுப்பாற்றல் அதிகரித்திருப்பது முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என்று தொற்றுநோய் வல்லுநர் பேராசிரியர் பால் தம்பையா கூறினார்.

உலக அளவிலும் இந்த ஆண்டு டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அது ஏறக்குறைய 5 மில்லியனாக இருந்தது. ஒப்புநோக்கச் சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட 14 மில்லியன் டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.

உலகில் இவ்வாண்டு சுமார் 3,000 பேர் டெங்கி தொடர்பான நோய்களின் காரணமாக மரணமடைந்தனர். சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 9,500 பேர் டெங்கி சம்பந்தப்பட்ட நோய்களால் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்