மெல்லிழைத்தாள் விற்ற உடற்குறையுள்ளவர் ஒரு வெளிநாட்டவர்; அதிகாரிகள் விசாரணை

2 mins read
83ff1a21-22f4-4777-b6f7-cfa475112150
ஒரே மாதத்தில் ஈசூன் வட்டாரத்தில் உடற்குறை உள்ள மூன்று ஆடவர்களை இவ்வாறு பார்த்துவிட்டதாகக் குடியிருப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். - படங்கள்: ஷின் மின்

ஈசூன் வட்டாரத்தில் உடற்குறையுள்ள ஆடவர் ஒருவர் அண்மையில் மெல்லிழைத்தாள் விற்று மக்களின் அனுதாபத்தைப் பெற்று வந்தார்.

இருப்பினும், காவல்துறை அதிகாரிகள் அந்த ஆடவரை அணுகியபோது, அவர் ஒரு வெளிநாட்டவர் என்று கண்டறியப்பட்டது. அதையடுத்து அதிகாரிகளால் அவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.

அதிகாரிகள் ஆடவரை செப்டம்பர் 13ஆம் தேதி காலை எட்டு மணியளவில் ஈசூன் ரிங் ரோடு புளோக் 846 அருகே விசாரித்ததாக ஷின் மின் வாசகர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஆடவருக்கு இடது கை இல்லை. அத்துடன் அவருக்குப் பாதி வலது கை மட்டுமே இருந்தது.

ஆடவர் மீது பரிதாபம் கொண்டதால் அவருக்கு உதவ மாது ஒருவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

எதிர்பாராத விதமாக பல காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆடவரிடம் பேச்சு கொடுத்த பிறகு அவ்விடத்திலிருந்து அவரைக் கொண்டு சென்றுவிட்டனர்.

ஆடவரின் கடப்பிதழைப் பார்ப்பதற்காக அவரது தோள்பையை அதிகாரிகள் தேடிப் பார்த்ததாக அருகில் கடை வைத்திருந்தவர் ஷின் மின்னிடம் கூறினார்.

ஆடவர் உள்ளூர்வாசி இல்லை என்று கண்டறியப்பட்டதை அடுத்து அதிகாரிகளுடன் ஆடவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதிகாரிகளிடம் ஆடவர் அமைதியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக அந்த ஆடவர் அப்பகுதியில் காணப்படுவதாகக் கடைக்காரர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஈசூன் வட்டாரத்தில் இந்த மாதம் மட்டும் உடற்குறையுள்ள மூன்று ஆடவர்களைத் தாம் பார்த்துவிட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மூவரும் வெளிநாட்டவர் போன்று தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். பிச்சை எடுக்கும் ஒரு வெளிநாட்டுக் கும்பலாக இவர்கள் செயல்பட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டவர் மீது குற்றம் கண்டறியப்பட்டால் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்படுவர் என்று வழக்கறிஞர் ஒருவர் சீன நாளிதழிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்