ஆஸ்திரேலியாவின் வில்லியம்சன் விமானப்படைத் திடலின் ஓடுபாதைக்கு அருகிலிருந்த புல்வெளியிலிருந்து நொடிப் பொழுதில் வானை நோக்கிப் பாய்ந்தது அந்த ஆளில்லா வானூர்தி.
சீறியபடியே வானில் வட்டமடித்த அது, சில நொடிகளிலேயே மேகக்கூட்டங்களுக்குள் கழுகைப் போல மறைந்தது.
சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ‘ஆர்பிட்டர் 4’ என்ற அந்தக் குறுந்தொலைவு ஆளில்லா வானூர்தியின் களப்பரிசோதனை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ‘வாலபி 2026’ பயிற்சியில் அங்கம் வகித்தது.
இந்த வானூர்தி அடர்ந்த காடுகளிலும் நகர்ப்பகுதிகளிலும் உடனுக்குடன் விரைந்து செயல்பட வல்லது.
கணினித் திரையில் கழுகுப் பார்வை
வானூர்தியை மெய்நிகர்ச் சூழலில் இயக்கும் முறையும் காண்பிக்கப்பட்டது. அதற்கான பயிற்சியாளரான 20 வயது இரண்டாம் லெப்டினன்ட் ராபர்ட் ஷாக்லாக், அதனை எவ்வாறு இயக்கி இலக்குகளைக் கண்காணிக்க வேண்டும் என்பதை விளக்கினார்.
“மின்னிலக்க வரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை நாம் தேர்ந்தெடுத்தால் போதும். வானூர்தி உடனே தானாகவே அந்த இடத்தை நோக்கிப் பறந்து, வானில் வட்டமடித்தபடி கீழே நடக்கும் ஒவ்வோர் அசைவையும் துல்லியமாகக் காட்டத் தொடங்கிவிடும்,” என்று அவர் விளக்கினார்.
“அதனை இயக்க வகுப்பறைப் பாடம், பாவனைப் பயிற்சி. நேரடிப் பயணம் எனப் பல கட்டப் பயிற்சிகள் தேவைப்படுகின்றன,” என்று திரு ஷாக்லாக் குறிப்பிட்டார்.
“வாலபி பயிற்சியில் தொடர்ந்து ஏழு வாரங்கள் தங்கி, அதிகாலையிலேயே எழுந்து காலட்படையின் கவச வாகனங்கள், பீரங்கிகளின் நகர்வுகளை வானிலிருந்து கண்காணிப்பது சவாலான, பயனுள்ள அனுபவமாக இருக்கிறது. இங்குப் பெற்ற களப்பயிற்சி சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கு இந்த அமைப்பை முழுமையாகப் பயன்படுத்த உதவும்,” என்றார் அவர்.
எளிமை, வேகம், பாதுகாப்பு
கிட்டத்தட்ட 50 கிலோ எடையும், 5.4 மீட்டர் நீள இறக்கையும் கொண்ட இந்தச் சிறிய வானூர்தி மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரையில் பறக்கக்கூடியது.
பகல் மட்டுமன்றி இரவிலும் வெப்பத்தை உணர்ந்து படம்பிடிக்கும் அதிநவீன உணர்கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறையும் இந்த வானூர்தி, தொடர்ந்து 24 மணி நேரம் வானில் உலவி, 150 கிலோமீட்டர் தொலைவு வரை துல்லியமாகத் தகவல்களைத் திரட்டும் ஆற்றல் கொண்டது.
பணி முடிந்ததும் வான்குடை, காற்றுப்பை ஆகியவற்றின் மூலம் கருவிகள் சேதமின்றிப் பத்திரமாகத் தரையிறங்கிவிடும்.
‘ஹெரான் 1’ போன்ற பெரிய ஆளில்லா வானூர்திகள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளபோதும், ‘ஆர்பிட்டர் 4’ கூடுதல் நீக்குப்போக்கை அளிப்பதாக 128வது படைப்பிரிவின் தளபதியும் திட்டத் தலைவருமான லெப்டினன்ட் கர்னல் கெல்வின் ஜெங் தெரிவித்தார்.
“நகர்ப்பகுதிகளிலும் அடர்ந்த நிலப்பரப்புகளிலும் இயங்கவல்ல ‘ஆர்பிட்டர் 4’, பெரிய வானூர்திகளுடன் இணைந்து, வெவ்வேறு உயரங்களில் பறந்து போர்க்களத்தைப் பல்வேறு நிலையில் கண்காணிக்க உதவுகிறது. இதன் நேரலைக் காணொளிகள் நேரடியாகத் தரைப்படைக் கட்டளை மையத்திற்குச் செல்வதால், முன்களத் தளபதிகள் விரல் நுனியில் முடிவெடுக்க முடிகிறது,” என்று அவர் கூறினார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் வானில் ஏறி, மேகக்கூட்டங்களுக்குப் பின்னே மறைந்து நின்று, எதிரிகளை வேவுபார்க்கும் ‘ஆர்பிட்டர் 4’, போர்க்களத்தில் தரைப்படை வீரர்களுக்கு வானிலிருந்து வழிகாட்டும் விழிப்புள்ள ‘கழுகுப் பார்வையாக’ உருவெடுத்துள்ளது.
