நிறுவனங்கள் சமூகத்திற்குப் பங்களிப்பது, வணிகத்தைத் தாண்டி, ஊழியரணியை ஈர்ப்பதற்கும் தக்கவைப்பதற்கும் உள்ள முக்கிய வழியாகும் என்று கூறியுள்ளார் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
ஊழியர்கள், தங்களது நிறுவனம் வணிகத்தைத் தாண்டி சமூகத்தில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்கிறார்கள் என்று கூறிய அவர், பங்களிக்க விரும்பும் துறைகளைத் தீர்மானம் செய்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டினார்.
தொண்டூழியத்தில் ஈடுபட விரும்பும் நிறுவனங்களை உரிய வாய்ப்புகளுடன் இணைக்கும் ‘தொண்டூழிய ஆதரவு’ அணுகுமுறையை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ அறிமுகம் செய்ததையடுத்து நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைப் பகிர்ந்தார்.
மரினா பே சேண்ட்சில் வியாழக்கிழமை (மே 14) நடைபெற்ற எதிர்காலப் பொருளியல் மாநாட்டின் இரண்டாவது நாளில் ‘நோக்கம் முதல் செயல்பாடுகள் வரை: சமூகத் தாக்கத்தின் மூலம் வணிக மதிப்புகளை உருவாக்குதல்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் திரு தினேஷுடன் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் ஜேனெட் ஆங், கிவ்.ஏஷியாவின் இணை நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான போங் யூ மிங், ‘கோஃபேஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் அதன் மேலாளருமான கிரீஷ்மா கெவாடா ஆகியோரும் பங்கேற்றனர்.
சமூகத் தாக்கத்தில் வணிகங்கள் ஈடுபடுவதன் முக்கியத்துவம், அதில் தலைமைக்கு உள்ள பங்கு, அரசாங்கம் இதில் ஆதரவளிக்கும் வழிகள் ஆகியவை குறித்து திரு தினேஷ் விளக்கினார்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தாம் செயல்பட்டபோது, மூத்தோர் பராமரிப்புத் துறைக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இணைந்து செயல்பட்டதைத் திரு தினேஷ் நினைவுகூர்ந்தார்.
குடியிருப்பாளர்களின் தேவைகளும் நிறுவனங்கள் வழங்க விரும்பும் ஆதரவும் ஒருங்கிணைவதன் சிறப்பையும் அவற்றின் விளைவாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“வரிச்சலுகைகள், மானியங்கள் மூலம் நிறுவனங்களின் பங்களிப்பைத் தொடர்ந்து ஊக்குவிப்பதற்கான வழிகளை அரசாங்கம் எப்போதும் ஆராய்கிறது,” என்றார்.
நிறுவனங்களுக்குப் பங்களிக்கும் ஆர்வம் இருந்தாலும், தேவை எங்குள்ளது என்பதை அறிவதில் சிரமம் நிலவுகிறது. மறுபுறம், சமூக மேம்பாட்டு மன்றங்கள் அத்தேவைகளை நன்கறியும். அவை வணிக நிறுவனங்களுடன் இணையும்போது, அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகளை நோக்கி வளங்களைச் செலுத்த உதவ முடியும்,” என்றும் சொன்னார் திரு தினேஷ்.
“நிறுவனங்கள் தங்களது உத்தி, தலைமைத்துவம், நிறுவனக் கலாசாரம் என அனைத்தும் ஊழியர், வணிகப் பயனர், சமூகம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார் திருவாட்டி ஜேனெட் ஆங்.
வணிகத்தில் சிறப்பாகச் செயல்படுவதுடன், சமூகத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்மையளிப்பதுடன், நோக்கத்தையும் லாபத்தையும் ஒன்றிணைக்கும் வழிகளை நாடவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
செய்தியாளர்களுடன் பேசிய திருவாட்டி கிரீஷ்மா கெவாடா, தமது நிறுவனம் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தைத் தாண்டி நிலையான, ஒருங்கிணைந்த தன்னார்வத் தொண்டூழியத்தில் ஈடுபடுவதாகச் சொன்னார்.
ஒருமுறை மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைத் தாண்டி, நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதிய அணுகுமுறை கூடுதல் ஆதரவாக அமையும் என்றார்.
இரண்டாவது நாள் மாநாட்டில், ஊழியரணிக்கான நன்மையை மேம்படுத்துதல், தொடர்ந்த நிச்சயமற்ற நிலைக்கு நிறுவனங்கள் தயாராகும் முறை ஆகியவை குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
சிக்கலான செயல்பாட்டுச் சூழலில் சிங்கப்பூர் நிறுவனங்களின் போட்டித்தன்மை, மீள்திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றை நிலைக்கச் செய்யும் உத்திகளை ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்காலப் பொருளியல் மாநாட்டில் 1,500க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பங்காளிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

