டாக்டர் எனிவேர் நிறுவனப் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்துள்ளதாக அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத மூன்றாம் தரப்பினரின் அத்துமீறிய ஊடுருவலால் நிகழ்ந்த இணையத் தாக்குதலே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. ஆயினும், இச்சம்பவம் எப்போது நிகழ்ந்தது, எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர் அல்லது எவ்வகையான தகவல்கள் கசிந்தன போன்ற விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.
“விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் கூடுதல் தகவல்களை இப்போது வெளியிட இயலாது,” என்று அது கூறியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் விசாரணைக்கு உதவவும் ‘என்சைன் இன்ஃபோசெக்யூரிட்டி’ எனும் இணையப் பாதுகாப்பு நிபுணத்துவ நிறுவனம் நியமிக்கப்பட்டது. அந்த நிறுவனம் மேற்கொண்ட விரிவான ஆய்வுக்குப் பிறகு கணினிப் பாதுகாப்புக் குறைபாடுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
மேலும், நோயாளிகளின் மருத்துவப் பதிவேடுகள் எவையும் இச்சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் எனிவேரின் துணை நிறுவனமான ‘அடெப்ட் ஹெல்த்’ வாடிக்கையாளர்கள் உட்பட பாதிக்கப்பட்டோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துச் சிங்கப்பூர் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திடமும் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேர்ந்த சிரமத்திற்குப் பயனீட்டாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட டாக்டர் எனிவேர் நிறுவனம், தனது மருத்துவ நிலையங்களில் சேவைகள் வழக்கம்போல் தடங்கலின்றித் தொடர்ந்து செயல்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
