இருமல் மருந்தை அதிகளவில் வழங்கிய மருத்துவருக்கு $20,000 அபராதம்

இருமல் மருந்தை அதிகளவில் வழங்கிய மருத்துவருக்கு $20,000 அபராதம்

படம்: பிக்சாபே

13 Nov 2026 - 3:31 pm

1 mins read

மூன்று நோயாளிகளுக்குக் ‘கோடீன்’ கலந்த இருமல் மருந்தை அளவுக்கு அதிகமாகப் பரிந்துரைத்த மருத்துவருக்குச் சிங்கப்பூர் மருத்துவ மன்ற ஒழுங்குமுறைத் தீர்ப்பாயம் $20,000 அபராதம் விதித்துள்ளது.

தேபான் கார்டன் மருந்தகத்தின் மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் சியூ ஈ ஹெர்ன் கெவின், தரமான மருத்துவச் சேவை வழங்கத் தவறிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

2020ஆம் ஆண்டில் அம்மூன்று நோயாளிகளுக்கும் ‘புரோமெடில்’, ‘ஃபெடாக் கோ சிரப்’, ‘கோபாடில்-ஈ’ ஆகிய இருமல் மருந்துகளை அவர் குறுகிய இடைவெளியில் தொடர்ந்து வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஒருமுறை 240 மில்லிலிட்டருக்கு மேல் அம்மருந்தை வழங்கக் கூடாது எனவும் நான்கு நாள்களுக்குள் மீண்டும் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் 1996ஆம் ஆண்டு சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்திய வழிகாட்டிக் குறிப்புகள் கூறுகின்றன.

அந்த நோயாளிகளுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், அம்மருந்துக்கு அடிமையாகும் ஆபத்தும் அளவுக்கு அதிகமான மருந்தால் உயிரிழக்கும் அபாயமும் அவர்களுக்கு இருந்ததாகத் தீர்ப்பாயம் குறிப்பிட்டது.

அவர்களில் ஒருவர் முந்தைய மருந்தைத் தொலைத்துவிட்டதாகக் கூறிய டாக்டர் சியூவின் விளக்கத்தையும் தீர்ப்பாயம் நிராகரித்தது.

முன்னதாக, 2021ஆம் ஆண்டில் சுகாதார அறிவியல் ஆணையமும் அவருக்கு $18,000 அபராதம் விதித்திருந்தது.

தற்போது விதிக்கப்பட்ட அபராதத்துடன், டாக்டர் சியூவுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, இத்தகைய செயலில் மீண்டும் ஈடுபடமாட்டேன் என எழுத்துபூர்வ உத்தரவாதம் அளிக்குமாறும் விசாரணைச் செலவுகளை முழுமையாக ஏற்குமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்