தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் மொழி வளர்ச்சியின் வாய்மொழி வரலாற்றைப் பேசும் ஆவணத் தொடர்

4 mins read
06fa3160-dfd8-41cf-84fb-e062d1ad95ff
‘தி பாட்’ அரங்கில் நடைபெற்ற ‘தமிழ்’ தொடக்க விழா நிகழ்ச்சியில் தொடரின் இயக்குநரும், நிர்வாகத் தயாரிப்பாளருமான முகமது அலியுடன் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழக மாணவர் சுப்பிரமணியன் கார்த்திகேயன் (இடது). - படம்: த கவி

சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் நிறைவடைந்ததைச் சிங்கப்பூர் கொண்டாடும் வேளையில், தமிழ்ச் சமூகத்தின் கதைகளை அனைவருக்கும் சொல்ல வேண்டும் எனும் விருப்பத்தில் ‘தமிழ்’ எனும் ஆவணத் தொடர் ஒன்றை பிரபல இயக்குநர் முகமது அலி எடுத்துள்ளார்.

வரலாற்றையும் பண்பாட்டையும் பதிவு செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று கூறிய அலி, இந்தத் தொடர் உருவான காரணம், பின்னணி, சவால்கள் ஆகியவற்றைக் குறித்து தமிழ் முரசிடம் பகிர்ந்து கொண்டார்.

“தற்போது 2025 ஆம் ஆண்டில் தமிழின் அருமை குறித்தும், சிங்கப்பூரில் அதன் நிலை குறித்தும் பெருமைகொள்கிறோம். ஆனால் இந்தப் பயணம் எளிதன்று. பல முன்னோடிகளின் விடாமுயற்சியில் பலன் இது,” என்று திரு அலி கூறினார்.

“நூற்றாண்டுகள் கழித்தும் இச்சமூகம் குறித்து அறியவும், பேசவும் வாய்வழி வரலாறு முக்கியம். அதனைப் பதிவு செய்ய வேண்டும் எனும் எண்ணத்தின் வெளிப்பாடே இத்தொடரின் விதை,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் தமிழ் மொழிப் புழக்கத்தின் தொடக்கம், தமிழ்ச் சமூகத்தினர் வந்து குடும்பங்களைக் கட்டமைத்த கதை, மொழிக் கற்றல் கற்பித்தல், தமிழ்ப் பள்ளிகள், அதிகாரத்துவ மொழியானது, ஊடக வளர்ச்சி, நாடகம் உள்ளிட்ட கலைத்துறைகளின் வளர்ச்சி எனப் பலவற்றையும் இத்தொடர் பேசுமென்றும் குறிப்பிட்டார்.

தனிமனிதர்களைப் போலவே, பல்வேறு சமூக அமைப்புகளும் அதன் உறுப்பினர்களும் மொழி சிறக்க பாடுபட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு அமைப்புகளின் வரலாற்றை இத்தொடர் விளக்கும் எனச் சொன்னார்.

இந்தத் தொடர் எடுக்க வேண்டும் என்பது ஆர்வத்தில் தொடங்கினாலும், இப்பயணத்தில் சவால்களுக்குக் குறைவில்லை, என்று இயக்குநரும், நிர்வாகத் தயாரிப்பாளருமான திரு அலி கூறினார்.

“இதற்காகப் பல்வேறு ஆவணங்களைத் தேடித் தேடிச் சேகரித்தோம். பலரைச் சந்தித்துப் பேசினோம். நாங்கள் பேட்டி எடுக்க விரும்பிய சிலர் மறைந்துபோனதால் அனுபவக்கதைகள் பல கிடைக்காமலேயே போயிற்று,” என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக, தமிழ் வானொலி வளர்ச்சி பற்றிய சில கூடுதல் தகவல்களுக்காகத் திரு எஸ் பீட்டரிடம் பேச விரும்பினோம். ஆனால், ஒளிப்பதிவுக்கான ஏற்பாடுகளுக்கு முன்னரே அவர் காலமாகிவிட்டார். வானொலிப் படைப்பாளராகவும் செய்தி வாசிப்பவராகவும் 57 ஆண்டுகளாகச் செயல்பட்ட அவரது அனுபவக் கதைகள் அவருடனே மறைந்து விட்டன,” என்றார்.

“அதேபோலத், தமிழ் ஊடகத் துறையில் வானொலி, நாடக நடிப்பு, பின்னணிக் குரல் கலைஞர், தொலைக்காட்சி நடிகர் எனப் பன்முகம் கொண்ட திரு ஜெயராமன் ராமைய்யாவும் அதே காலகட்டத்தில் மறைந்தார். அவர்களின் கதைகளைக் கேட்க முடியாமல் போனது வருத்தமளித்தாலும், தற்போது இருப்பவர்களின் கதைகளை இயன்ற வரை பதிவு செய்ய வேண்டும் எனும் உத்வேகத்தில் இதனைச் செய்துள்ளோம்,” என்றார்.

தமிழ் முரசு, கோ சாரங்கபாணி உட்பட பலரின் பங்களிபையும் ஆவணப்படுத்தியுள்ளது இத்தொடர். வேர்களைப் பற்றித் தெரிந்தால்தான் சமூகம் எங்கு நோக்கிப் போகிறது எனத் தெரியும் என்று அவர் கூறினார்.

“நாம் எந்த நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் அங்கு வேரூன்ற ஈடுபாடு அவசியம். கருத்தியல், மனோவியல் அடிப்டையில் இந்நிலத்தில் என் முதலீடு எவ்வாறு இருக்கிறது என்பதைப் பொறுத்தே நம் ஈடுபாடு அமையும்,” என்றும் திரு அலி குறிப்பிட்டார் .

தமிழர் என்ற அடையாளம் குறித்த பெருமையை இத்தொடர் அதிகரிப்பதாக தயாரிப்பாளர் முகமது ஹாசிக், 29, கூறினார்.

“இந்தத் திட்டத்தில் அனைவரும் குழுவாக இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. நம் முன்னோர்கள் சமூகக் கட்டமைப்பில் பங்களித்துள்ளதைக் கேட்பதிலும் சொல்வதிலும் பெரும் பெருமை, என்றார் திரு ஹாசிக்.

“அறுபது ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல். இந்நிலையில், சிங்கப்பூர் பல அம்சங்களில் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைப் பார்த்து மகிழ்கிறோம். அதேபோல, மொழியின் வளர்ச்சியை அறிய இத்தொடர் உதவும் என்பதால் இதனை உருவாக்கியதில் பெருமை,” என்றார் மீடியாகார்ப் நிகழ்ச்சி நிர்வாகத் துணைத் தலைவர் பிரியா சூர்யமூர்த்தி, 38.

இளையர்கள் தொடங்கி அனைவருமே தமிழினை ஒரு பேச்சு மொழியாகப் பார்ப்பதைத் தாண்டி, அதன் அழகு, நுணுக்கம்குறித்த புரிதலை ஏற்படுத்தி, அதன்மீதான ரசிப்புத் தன்மையை இத்தொடர் மேம்படுத்தும் என நம்புகிறோமென்றும் திருவாட்டி பிரியா கூறினார்.

“இத்தொடரின் மூலம் மொழி வளர்ச்சியில் உள்ள சோதனைகள், சாதனைகளைத் தெரிந்து கொள்வதுடன், பலரது நேர்காணல்கள்மூலம் தெரிய வரும் கதைகள் அடுத்த தலைமுறைக்கு அவர்கள் எழுப்பிய கட்டடத்தை மேலும் வலுவாக்க உழைக்க வேண்டும் எனும் உந்துதலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்,” என்றார் தமிழ் முரசின் ஆசிரியர் த ராஜசேகர்.

இத்தொடர் ஒரு பெரும் முயற்சி என்று கூறிய வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி, “சமூக வளர்ச்சிக்கும் வளப்பத்துக்கும் முன்னோர் எவ்வாறு பங்களித்துள்ளனர் என்பது வருங்கால சந்ததியினருக்குத் தெரிவது அவசியம்,” என்றார்.

நமது முன்னோர் வாழ்வியலுக்கும் நமக்கும் உள்ள ஒற்றுமைகள், வேறுபாடுகள் குறித்து அறிவதுடன், சூழல்களுக்குத் தகுந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள புதிய சிந்தனைகளுக்கு இத்தொடர் வழிவகுக்கும் என நம்புவதாகக் கூறினா இத்தொடரைக் காண ஆவலுடன் காத்திருக்கும் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழக மாணவியும், அப்பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவருமான கண்ணன் வை‌ஷ்ணவி, 21.

“இந்த ஆவணம் தமிழ்ப் புழக்கத்தை மட்டுமன்றி, காலமாற்றத்தைத் தாங்கி, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றுள்ள கதைகளைத் தெரிந்துகொள்வது, அப்பணியை நானும் தொடர வேண்டும் எனும் பொறுப்புணர்வை அளிக்கும் என நினைக்கிறேன்,” என்றார் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழக மாணவர் சுப்பிரமணியன் கார்த்திகேயன், 23.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்