காம்லிங்க்+ தேசிய ஆதரவுத் திட்டத்தின்கீழ் உள்ள சுமார் ஆறு குறைந்த வருமானக் குடும்பங்களில் ஒன்று, குடும்ப வன்முறை பிரச்சினைகளை எதிர்கொண்டதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 2024 நிலவரப்படி, இத்திட்டத்தில் உள்ள குடும்பங்களில் 16 விழுக்காடு, குடும்ப வன்முறை அல்லது குழந்தைப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளைக் கொண்டிருந்தன. இது, 2023ல் 11 விழுக்காடாக இருந்தது.
குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஆதரவுப் போக்குகள் அறிக்கையில், குடும்ப வன்முறை தொடர்பான தரவுகள் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இப்போது இரண்டாம் பதிப்பாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
காம்லிங்க்+ திட்டத்தில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டன.
சமூக மேம்பாட்டை நோக்கிய குடும்பங்களுக்கு ஆதரவு
2023ல் தொடங்கப்பட்ட காம்லிங்க்+ திட்டம், நிதிச் சலுகைகள், பிற உதவிகள் மூலம் குறைந்த வருமானக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கிறது. இதன்வழி சமூக மேம்பாட்டை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகுதியுள்ள குடும்பங்கள் அதிகபட்சம் நான்கு தொகுப்புத் திட்டங்களுக்குப் பதிவுசெய்யலாம். பாலர் பள்ளி கல்வி, வேலைவாய்ப்பு, கடன் நீக்கம், சொந்த வீட்டிற்கு உரிமையாளராவது ஆகியவற்றை அவை உள்ளடக்கி உள்ளன.
மேலும், அவர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் $1,600 சம்பளத்துடன் கூடிய மத்திய சேம நிதிக்குப் பங்களிப்பு தரும் வேலையில் இருப்பது, தங்கள் பிள்ளைகளைத் தவறாமல் பாலர் பள்ளிக்கு அனுப்புவதை உறுதிசெய்வது போன்ற அளவுகோல்களைப் பூர்த்திசெய்தால் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படும்.
டிசம்பர் 2024 நிலவரப்படி, மொத்தம் 10,219 குடும்பங்கள் கொம்லிங்க்+ திட்டத்தில் இணைந்திருந்தன.
தொடர்புடைய செய்திகள்
அவர்களின் முன்னேற்றம் ஐந்து அம்சங்களில் கண்காணிக்கப்பட்டது. வருமானப் பாதுகாப்பு, பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி, வீடமைப்பு, குடும்பச் செயல்பாடு, சுகாதாரம் ஆகியவை அவை.
குடும்பங்கள் நிலைத்தன்மையை, தற்சார்பு கொண்ட நிலையை அல்லது சமூக மேம்பாட்டை அடைந்துள்ளனவா என்று மதிப்பிடப்பட்டன.
குடும்ப வன்முறை பற்றிய தரவு, குடும்பச் செயல்பாடு அம்சத்தின்கீழ் வருகிறது. இந்தக் கண்காணிப்புத் துறையில், 2024ல் 1,657 குடும்பங்களின் உறுப்பினர்கள் தீங்குகளிலிருந்து பாதுகாப்பற்றவர்கள் என்று மதிப்பிடப்பட்டனர்.
சுகாதார அம்சத்தில், 90 விழுக்காட்டுக் குடும்பங்கள் நிலைத்தன்மையை அடைந்துள்ளன என்று அறிக்கை குறிப்பிட்டது. கடந்த ஆண்டில் குடும்ப உறுப்பினர் எவரும் மருத்துவமனையில் சேர்க்கப்படாததும் அனைத்துப் பிள்ளைகளும் மூன்று வயதிற்குள் கட்டாயத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதும் இதன் வரையறையாகும்.
முன்னேற்றமும் தொடரும் சவால்களும்
பிள்ளைகளின் வளர்ச்சியிலும் கல்வியிலும் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்பட்டது.
இந்த அம்சத்தில், தற்சார்பு நிலை கொண்ட குடும்பங்களின் விகிதம், 2023ல் 13 விழுக்காட்டிலிருந்து 2024ல் 21 விழுக்காடாக உயர்ந்தது. சிறார்கள் பாலர் பள்ளிக்குச் செல்வது குறித்த விரிவான தரவுகள் இப்போது கிடைப்பது இந்த உயர்வுக்கு ஒரு காரணம்.
வருமானப் பாதுகாப்பில், 28 விழுக்காட்டுக் குடும்பங்கள் சமூக மேம்பாட்டை அடைந்தன. இது, ஓராண்டிற்கு முன்பு 26 விழுக்காடாக இருந்தது.
அதே சமயம், 4 விழுக்காட்டினர் சொந்த வீட்டு உரிமையாளராகினர். இது, 2023ன் விகிதத்தைவிட இருமடங்காகும். இருப்பினும், 39 விழுக்காட்டுக் குடும்பங்களில் இன்னும் நிலையான வேலையில் உறுப்பினர்கள் யாரும் இல்லை என்று அறிக்கை குறிப்பிட்டது.
மொத்தத்தில், நிலைத்தன்மை அடையவில்லை என்று மதிப்பிடப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 2024ல் சற்று உயர்ந்து, 56 விழுக்காடாக இருந்தது.
அமைச்சின் அறிக்கையின்படி, இந்தக் குடும்பங்களில் இளம் குழந்தைகள், ஒற்றைப் பெற்றோர் அல்லது அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியவற்றைக் கொண்டவை என்று தெரிய வந்துள்ளது.

