சிராங்கூன் நார்த்தில் விபத்து; தப்பியோடியதாக நம்பப்படும் ஓட்டுநர் கைது

சிராங்கூன் நார்த்தில் விபத்து; தப்பியோடியதாக நம்பப்படும் ஓட்டுநர் கைது

1 mins read
7c451bf7-5289-49fd-a56d-d722419d2084
விபத்துக்குப் பிறகு நிகழ்ந்த சம்பவங்கள் பதிவான காணொளியில் இடம்பெறும் காட்சிகள். - காணொளிப் படங்கள்: எஸ்ஜி ரோடு / மதர்‌ஷிப்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் 46 வயது ஆடவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) கைதுசெய்யப்பட்டார்.

ஹவ்காங் அவென்யூ 2ஐ நோக்கிய அங் மோ கியோ அவென்யூ 3 பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து வெள்ளிக்கிழமை அதிகாலை 12.40 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்தததாக சிங்கப்பூர்க் காவல்படை, மதர்‌ஷிப் ஊடகத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. அந்த விபத்து, கார் மோதிய பிறகு ஓட்டுநர் தப்பியோட முயன்ற சம்பவம் (hit-and-run) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு காணப்பட்ட காட்சிகள் பதிவான காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், கவிழ்ந்த மோட்டார் சைக்கிளுக்கு அருகே தரையில் கிடந்த ஒருவரை நோக்கி ஆடவர்கள் மூவர் சென்றுகொண்டிருந்தது தெரிந்தது.

அவர்களுடன் மற்றோர் ஆடவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுபோல் தென்பட்டது. சம்பந்தப்பட்ட கார், போக்குவரத்துக்கு எதிரான திசையில் நின்றுகொண்ருந்தது போல் தெரிந்தது.

பிறகு அந்த ஆடவர் காருக்குச் சென்று சம்பவ இடத்திலிருந்து ஓட்டிச் சென்றார். அங்கிருந்து போக முயன்றபோது கார் சாலைத் தடுப்புகள் மீது மோதியது.

அதிகாரிகள் வருவதற்கு முன்பு ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து சென்றிருந்ததாகக் காவல்துறை கூறியது. பிறகு மதுபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தின்பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

சுயநினைவுடன் இருந்த 38 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதை சிங்கப்பூர்க் காவல்படையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்