ஈஸ்ட் கோஸ்ட்டின் காத்தோங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடந்த சாலை விபத்தில் 46 வயது ஆடவர் சுகாதார அறிவியல் ஆணையத்தின் (ஹெச்எஸ்ஏ) விசாரணையில் உதவிவருகிறார்.
விபத்துக்குப் பிறகு அவரது வீட்டில் நடந்த சோதனையில் அதிகாரிகளால் மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் அன்றையதினம் அதிகாலை 1 மணியளவில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாக காவல்துறை வியாழக்கிழமை (அக்டோபர் 29) தெரிவித்தது.
அந்த வாகனங்களின் ஓட்டுநர்களில் ஒருவர் கவனமின்றியும் பாதுகாப்பின்றியும் வாகனத்தை ஓட்டியதற்கான விசாரணையில் உதவிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் யாருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை.
புதன்கிழமை (அக்டோபர் 28) இன்ஸ்டகிராமில் வெளிவந்த பதிவில் மின்சிகரெட்டையும் அதனைப் புகைப்பதற்கான சாதனங்களும் வாகன ஓட்டுநர் ஒருவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் வெளியிட்டது.
விபத்து குறித்து அதே சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில் இரு ஆடவர்களுக்கு இடையே வாக்குவாதம் நடப்பதும் அது கைகலப்பில் முடிவதும் தெரிகிறது.
அதில் காணொளி எடுப்பவரை நெருங்கிய சிவப்பு உடை அணிந்த ஒரு ஓட்டுநரின் கரத்தில் ஒருவித வட்டவடிவக் கருவி காணப்பட்டது.
