லென்டோர் அவென்யூவில் சனிக்கிழமை (ஜூலை 20) ‘டிப்பர் டிரக்’ (tipper truck) கனரக வாகனம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதன் 35 வயது ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
கனரக வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்திருப்பது, இரண்டு வாரங்களில் இது மூன்றாவது முறை.
சாலையின் இடது தடத்தில் டிரக் வாகனம் அதன் பக்கவாட்டில் சாய்ந்து கிடப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
ஈசூன் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் லென்டோர் அவென்யூவில் டிப்பர் டிரக் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து மாலை 5.40 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியதில் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.