லிம் சூ காங்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் வேன் ஓட்டுநர் ஒருவர் வாகனத்தில் சிக்கிக்கொண்டார்.
இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இந்த விபத்து கடந்த புதன்கிழமை (மார்ச் 18) நிகழ்ந்தது.
லிம் சூ காங் ரோட்டை நோக்கிய நியோ டியூ ரோட்டில் ஒரு காரும் ஒரு வேனும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து புதன்கிழமை காலை 11.45 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் வியாழக்கிழமை (மார்ச் 19) தெரிவித்தன. வேனின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கிக்கொண்டிருந்ததாகவும் அவரை ஹைட்ராலிக் (hydraulic) மீட்பு முறையைக் கொண்டு காப்பாற்றியதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
Singapore Incidents ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் ஒரு வேனும் ஒரு காரும் விபத்துக்குள்ளான பிறகு நேர் எதிரே நின்றுகொண்டிருந்தது தெரிந்தது. வேனின் முன்பகுதி பெரிய அளவில் சேதமடைந்ததும் தெரிந்தது. வேனின் ஓட்டுநர் இருக்கையில் ஓர் ஆடவரையும் காண முடிந்தது.
கார் ஓட்டுநரான 45 வயது மாதும் வேனை ஓட்டிய 61 வயது ஆடவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை சொன்னது. ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் மற்றொருவர் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
வேன் ஓட்டுநர் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார்.

