சாங்கி விமான நிலையத்தில் பயணப்பெட்டிகளைக் கையாள ஓட்டுநரில்லா வாகனங்கள்

2 mins read
5c95a1a5-7e31-4025-a1b4-c66fc77335cc
தானியக்க வாகனங்கள், மொத்தம் 10 டன் எடை கொண்ட நான்கு கொள்கலன்களை இழுத்துச்செல்லும் ஆற்றல் பெற்றவை.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தின் முதலாம் முனையத்துக்கும் நான்காம் முனையத்துக்கும் இடையில் பயணப்பெட்டிகளையும் பைகளையும் கொண்டுசெல்லத் தானியக்க வாகனங்கள் அறிமுகம் கண்டுள்ளன.

விமான நிலையச் செயல்பாடுகளில் பாதுகாப்பு ஓட்டுநர் இல்லாமல் அத்தகைய வாகனங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ‌ஷுவெலிங் தானியக்க வாகனங்களின் செயல்பாடுகளைச் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) தொடக்கிவைத்தார்.

‘டிராக்ட்டர்’ என்று அழைக்கப்படும் அந்த வாகனங்கள் 2023ஆம் ஆண்டிலிருந்தே விமானநிலையச் செயல்பாடுகளில் சோதிக்கப்பட்டன. சென்ற ஆண்டு (2025) நவம்பர் மாதம் வரை நெருக்கடிநிலை ஏதேனும் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க உதவும் நோக்கத்துடன் பாதுகாப்பு ஓட்டுநர் ஒருவர் வாகனத்தில் இருந்தார்.

பயணப்பெட்டிகளையும் பைகளையும் கையாளும் வழக்கமான டிராக்ட்டர்களைப் போலவே இருக்கின்றன புதிய மின்-நீல நிற வாகனங்கள். அவற்றில் உணர்கருவிகளும் ஒளிப்பதிவுச் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. விமானநிலையத்தில் பயணப்பெட்டிகளையும் பைகளையும் ஏற்றி இறக்கும் பகுதியிலும் விமானங்கள் வந்துசெல்லும் பகுதியிலும் வாகனங்கள் செல்ல அவை துணைபுரியும்.

தானியக்க வாகனங்கள், மொத்தம் 10 டன் எடை கொண்ட நான்கு கொள்கலன்களை இழுத்துச்செல்லும் ஆற்றல் பெற்றவை. விமானநிலையத்தின் பழைய, புதிய முனையங்களுக்கு இடையில் ஏழு கிலோமீட்டர் பாதையில் அவை இயங்கும்.

நான்காம் முனையத்துக்கும் மற்ற மூன்று முனையங்களுக்கும் இடையில் பயணப்பெட்டிகளைக் கையாளும் கட்டமைப்பு இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லை. அதனால் முதலாம் முனையத்திற்குப் பயணப்பெட்டிகளையும் பைகளையும் கொண்டுசெல்வது அவசியமாகிறது என்று சாங்கி விமானநிலையக் குழுமத்தின் பேச்சாளர் கூறினார்.

மேலும் ஆறு தானியக்க வாகனங்கள் இரண்டாம் முனையத்தில் இவ்வாண்டு சேர்க்கப்படும். முனையத்தின் பயணப்பெட்டிகளையும் பைகளையும் கையாளுகின்ற பகுதிக்கும் விமானங்கள் நிறுத்தப்படும் 35 இடங்களுக்கும் இடையில் அவை இயங்கும்.

தானியக்க வாகனங்கள் செயல்படத் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு தானியக்க வாகனத்துக்கும் வழக்கமாக இயங்கும் 75 வாகனங்கள் இருக்கும். தற்போது சாங்கி விமான நிலையத்தில் வழக்கமான முறையில் பயணப்பெட்டிகளை ஏற்றிச்செல்ல ஏறக்குறைய 600 வாகனங்கள் செயல்படுகின்றன.

தானியக்க வாகனங்களின் செயல்பாடுகள் மற்ற முனையங்களுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்படும் என்று குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் லியு யான்லிங் தெரிவித்தார்.

2027க்குள் ஓட்டுநரில்லா 24 வாகனங்கள் விமானநிலையத்தில் செயல்படும். பயணப்பெட்டிகளுக்கும் அப்பால் சரக்குகளையும் சாதனங்களையும் கொண்டுசெல்லும் ஆற்றலையும் அவை பெற்றிருக்கும்.

விமானநிலைய ஊழியர்கள், சிக்கலான மற்றப் பணிகளைக் கையாளத் தானியக்க முறை வழிவிடும் என்று திருவாட்டி லியு சொன்னார். தானியக்க வாகனங்களை இயக்க ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

தற்போது 10 ஓட்டுநர்கள் அதற்குரிய சான்றிதழைப் பெற்றுள்ளனர். வரும் மாதங்களில் மேலும் அதிகமானோருக்குப் பயிற்சி தரப்படும் என்று திருவாட்டி லியு கூறினார்.

குறிப்புச் சொற்கள்