இந்தோனீசியாவின் பாத்தாம் தீவின் இரவு விடுதியில் 2025 ஜூலையில் போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவரை தாம் எதிர்கொண்டதாக 53 வயது சிங்கப்பூரர் முகமது கூறினார்.
பாத்தாமின் நகோயா வட்டார இரவுவிடுதிக்குச் சென்றிருந்தபோது, மிடுக்காக உடையணிந்த இந்தோனீசியர் ஒருவர் தம்மை அணுகி ‘நைக்கி’ அல்லது ‘சூப்பர்மேன்’ வேண்டுமா என்று கேட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
கோல்ஃப் விளையாட்டுக்குப் பிறகு சிங்கப்பூரர்கள் மேலும் சிலருடன் அவர் அந்த இரவு விடுதிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்.
“அந்த ஆடவர் சிறிய பெட்டி ஒன்றைத் திறந்து அதில் பஞ்சின்மேல் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளைக் காட்டினார். அவை இனிப்புகள் என்று நினைத்தேன். ஆனால், அவை (‘நைக்கி’, ‘சூப்பர்மேன்’ முத்திரை பதிக்கப்பட்ட) எக்ஸ்டசி மாத்திரைகள் என்று அவர் கூறினார்,” என்றார் திரு முகமது.
அவற்றை மறுத்ததை அடுத்து, அந்த ஆடவர் ‘ஐஸ்’ போதைப்பொருளையும் காட்டியதாக முகமது கூறினார்.
கடந்த ஜனவரி 18ஆம் தேதி, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் பாத்தாம் இரவு விடுதியில் அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டதை அறிந்த பிறகு திரு முகமது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசினார்.
இந்தோனீசியாவின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரிய அதிகாரிகளுடன் இணைந்து சிங்கப்பூர் அதிகாரிகள் அந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதன்கீழ், 100 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள். சோதனை நடவடிக்கையின் முடிவில் இந்தோனீசியர்கள் ஐவர், போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது போதைப்பொருளுக்கான சோதனை நடத்தப்படுவது வழக்கம் என்றாலும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்ற நாடுகளுக்குச் சென்று போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கமன்று.
போதைப்பொருள் நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில் அனைத்துலகச் சட்ட அமலாக்கப் பிரிவினருடன் அணுக்கமாகப் பணியாற்றுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற அமலாக்க நடவடிக்கை, வெளிநாடுகளுக்குச் சென்று போதைப்பொருளை உட்கொண்டால் மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டிருப்போருக்கு எச்சரிக்கையாக அமையும் என்று துணை ஆணையர் ஆரோன் டாங் கூறினார்.


