கடல்சார் எல்லைகளைப் பாதுகாக்க அச்சுறுத்தல்களை முன்னரே கண்டறிய வேண்டும்: கா.சண்முகம்

கடல்சார் எல்லைகளைப் பாதுகாக்க அச்சுறுத்தல்களை முன்னரே கண்டறிய வேண்டும்: கா.சண்முகம்

2 mins read
4637f7a9-1a9c-4c8d-b449-a56490bd3801
சுறுசுறுப்பான கடல் துறையின் விளைவாக சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடல்சார் வர்த்தகம் ஏறத்தாழ 7 விழுக்காட்டை வகிப்பதால் நமது கடல்சார் சுற்றுப்புறங்களை நிர்வகிப்பது சவாலான ஒன்று எனச் சுட்டிக்காட்டினார் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம். - படங்கள்: தற்காப்பு அமைச்சு
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூர்க் கடல்துறையில் கிட்டத்தட்ட 4,000 கப்பல்கள் நாட்டின் எல்லைகளைச் சூழ்ந்துள்ளன.

ஒரு நாளில் ஏறத்தாழ 1,000 கப்பல்கள் எல்லைகளைக் கடந்து உள்வருவதும் வெளியே செல்வதுமாக நமது கடல்துறை மிகவும் சுறுசுறுப்பான ஒன்றாக விளங்குகிறது என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா.சண்முகம் தெரிவித்தார்.

சுறுசுறுப்பான கடல் துறையின் விளைவாகச் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடல்சார் வர்த்தகம் குறைந்தது 7 விழுக்காட்டை வகிப்பதால் நமது கடல்சார் சுற்றுப்புறங்களை நிர்வகிப்பது சவாலான ஒன்று என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“எனவே, முன்பே அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, எச்சரிக்கை விடுத்து, அதை எதிர்ப்பது அவசியம்,” என்றார் அமைச்சர்.

கடல்சார் பகுதிகளில் ஏற்படக்கூடும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக சிங்கப்பூர் தனது எல்லைகளை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதைக் காட்சிப்படுத்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) காலை ‘எக்சர்சைஸ் ஹைகிரெஸ்ட்’ நேரலை பயங்கரவாத எதிர்ப்புப் பாவனைப் பயிற்சி நடத்தப்பட்டது.

சாங்கி கடற்படைத் தளத்தில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியைப் பார்வையிடக் கடற்படையின் ‘ஆர்எஸ்எஸ் ஜஸ்டிஸ்’ கப்பலில் ஏறிய திரு சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவருடன் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், தற்காப்புத் துணை அமைச்சர் டெஸ்மண்ட் சூ இருவரும் பயிற்சியைப் பார்வையிட்டனர்.

2013ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படும் இந்தப் பயிற்சி, சிங்கப்பூர்க் கடல்சார் நெருக்கடி நிர்வாக மையத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இவ்வாண்டு, மையத்தின்கீழ் சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படை, சிங்கப்பூர்க் கடலோரக் காவல் படை, சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் கடல் பிரிவு, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர்ச் சுங்கத்துறை, சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டன.

கடலில் அச்சுறுத்தலாக உருவகப்படுத்தப்பட்ட பாவனை பயங்கரவாதக் கப்பல் ஒன்றைச் சிங்கப்பூர்க் கடலோரக் காவல் படை, சிங்கப்பூர்க் காவல்துறை ஆகியவற்றின் சிறிய கப்பல்கள் தடுத்து நிறுத்துவதுபோல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

பயங்கரவாதக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் குடிமைத் தற்காப்புப் படையின் கப்பல் பிரிவு அணைத்தது.
பயங்கரவாதக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் குடிமைத் தற்காப்புப் படையின் கப்பல் பிரிவு அணைத்தது. - படங்கள்: தற்காப்பு அமைச்சு

அத்துடன், பாவனை பயங்கரவாதக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் குடிமைத் தற்காப்புப் படையின் கப்பல் பிரிவு அணைத்தது.

சிங்கப்பூர் ராணுவப் படையின் சிறப்பு நடவடிக்கைப் பணிக்குழு ஹெலிகாப்டரிலிருந்து கப்பலுக்குச் சென்றடையும் காட்சி.
சிங்கப்பூர் ராணுவப் படையின் சிறப்பு நடவடிக்கைப் பணிக்குழு ஹெலிகாப்டரிலிருந்து கப்பலுக்குச் சென்றடையும் காட்சி. - படங்கள்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் கப்பல் எவ்வாறு கடல்சார் போக்குவரத்தை நிர்வகிக்கிறது என்பதையும் ராணுவப் படையின் சிறப்பு நடவடிக்கைப் பணிக்குழு ஹெலிகாப்டரிலிருந்து பாவனைக் கப்பலுக்குச் சென்றடைந்ததையும் பாவனைப் பயிற்சி காட்டியது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
தற்காப்பு அமைச்சுசிங்கப்பூர்கடலோரக் காவல்கடற்படைகாவல்துறைகுடிமைத் தற்காப்புப் படைசுங்கத்துறைமொத்த உள்நாட்டு உற்பத்திகடல்சார்பாவனைப் பயிற்சிகடல்துறை