தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெக்நேர் ரோட்டில் அதிகாலைத் தீ விபத்து: மருத்துவமனையில் இருவர்

2 mins read
4e190c7f-4c9f-4e82-8d62-b9f0ca4b7e13
புளோக் 112ன் பத்தாவது மாடியில் உள்ள வீடு ஒன்றின் வெளியே இருந்த அலமாரியில் தீ விபத்து ஏற்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது. - படம்: ஷான் லோ/ஃபேஸ்புக்

மெக்நேர் சாலையிலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடு ஒன்றுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த அலமாரி தீப்பற்றியதை அடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அதிகாலை 4 மணியளவில் மெக்நேர் சாலை, புளோக் 112ல் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அந்தப் புளோக்கின் பத்தாவது மாடியில் உள்ள வீடு ஒன்றின் வெளியே இருந்த அலமாரியில் தீ விபத்து ஏற்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வருவதற்குள், பக்கத்து வீட்டுக்காரர்கள் வாளி வாளியாகத் தண்ணீரையும், உலர் ரசாயனத் தீயணைப்புக் கருவியையும் பயன்படுத்தித் தீயை அணைத்துவிட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும், மற்றொருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ, புளோக்கின் குடியிருப்பாளர்களின் விழிப்புணர்வையும் தைரியத்தையும் பாராட்டினார். குடியிருப்பாளர்களில் சிலர் பக்கத்து வீட்டுக்காரர்களின் கதவுகளைத் தட்டி, அவர்களை வெளியேறும்படி எச்சரித்ததாக அவர் குறிப்பிட்டார்.

“இன்று காலை நான் சென்றபோது, பலர் நல்ல மனநிலையில் இருந்தனர். நல்ல அண்டை வீட்டார்களைக் கொண்டிருப்பது தம் நற்பேறு என்று ஒருவர் கூறினார்,” என்று திரு லோ, சனிக்கிழமை காலை 11 ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

“புளோக்கின் மீதமுள்ள வீடுகளுக்கு மின்சாரத்தை மீண்டும் கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறோம். மாலைக்குள் இது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

மின்வெட்டால் எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜாலான் புசார் நகர மன்றமும், குடியிருப்போர் கட்டமைப்பும் தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவ சம்பவ இடத்தில் இருப்பதாக திரு லோ கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்